Saturday 20 April 2024

புரட்சிக் கவிஞருக்குப் பெருவிழா- இலக்கிய அரங்கம்


புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களுக்கு ,அவரின் நினைவு நாளான ஏப்ரல் 21 முதல் அவரின் பிறந்த நாளான ஏப்ரல் 29வரை தொடர்ச்சியான இலக்கிய நிகழ்ச்சிகளை புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழர் மன்றம் ,டெலிவர்,அமெரிக்கா- புரட்சிக்கவிஞருக்கு பெருவிழா என்னும் தலைப்பில்  எடுக்கின்றது.அதன் ஒரு பகுதியாக நடைபெறும் 'இலக்கிய அரங்கத்தில்'  ஏப்ரல் 23 செவ்வாய்க்கிழமை காலை 6.30 மணிக்கு (தமிழ் நாடு நேரம் )\,'இருபதாம் நூற்றாண்டின் இலக்கிய உலகின் பெருவேந்தர் பாரதிதாசன் ' என்னும் தலைப்பில் உரையாற்றுகிறேன்.தோழர்  ம.வீ.கனிமொழி,பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம்,அமெரிக்கா அவர்கள் 'உயிர் நேயத்தில் இலக்கிய நயம் ' என்னும் தலைப்பில் உரையாற்றுகிறார்.நிகழ்வின் தொடக்கத்தில் திருமிகு.தென்மொழிப்பண்ணன் ஈகவரசன் அவர்கள் பாரதிதாசன் பாடல்களைப் பாடுகின்றார்.அமெரிக்கத் தமிழ் ஊடகத்தின் தலைவர் திருமிகு ரூபன் ஜெகநாதன் அவர்கள் வாழ்த்துரை வழங்குகிறார்.திருமிகு கல்யாணசுப்பு ,புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம் அவர்கள் நெறியாள்கை செய்கிறார். புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழர் மன்றத்தின் அமைப்பாளர் திருமிகு.துரைக்கண்ணன் துரைஎழில்விழியன் அவர்கள் இந்த 9 நாள் நிகழ்வுகளையும் சிறப்பாகத் திட்டமிட்டு நடத்துகிறார். பாராட்டுக்குரிய பணி.வாருங்கள் நண்பர்களே,தோழர்களே,உறவுகளே,நிகழ்வுக்கு வாருங்கள்.

 

Friday 19 April 2024

மொழி பெயர்ப்புப் பணியில் செயற்கை நுண்ணறிவுக் கருவிகள் ! – முனைவர்.வா.நேரு

 இன்றைய யுகம் என்பது செயற்கை நுண்ணறிவு யுகம். கணினி யுகம், இணைய உலகம் எல்லாம் கடந்து செயற்கை நுண்ணறிவு உலகமாக இன்றைய உலகம் மாறியிருக்கிறது. 1955ஆம் ஆண்டில் ஜான் மெக்காதே என்பவர்தான் இந்தச் செயற்கை நுண்ணறிவு என்ற சொல்லைப் பயன்படுத்திய இவரே செயற்கை நுண்ணறிவின் தந்தை எனப்படுகிறார். 1955இல் முதன்முதல் இது பற்றி விளக்கிய அறிவியல் கருத்தரங்கத்திலேயே செயற்கை நுண்ணறிவின் நோக்கங்களில் ஒன்றாக ‘இயந்திரங்களை மொழியைப் பயன்படுத்தச்செய்வது’ என்பதைக் குறிப்பிடுகின்றார்.

2024, மார்ச் 31 அன்று இணையம் வழியாக நடைபெற்ற ‘செயற்கை நுண்ணறிவு யுகத்தில் தமிழ்’ என்னும் சிறப்புரையைக் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. ‘மக்கள் சிந்தனையாளர்’ தோழர் ஆழி.செந்தில்நாதன் அவர்கள் அச்சிறப்புரையை அளித்தார். பெரியார் பன்னாட்டு அமைப்பு, அமெரிக்காவின் தலைவர் அய்யா மருத்துவர் சோம. இளங்கோவன் உள்ளிட்ட தமிழ் மொழி மீதும் அறிவியல் மீதும் ஆர்வம் உள்ள பலர் உலகின் பல பாகங்களில் இருந்தும் கலந்து கொண்டனர்.

இந்தச் செயற்கை நுண்ணறிவு யுகத்தில் மொழி என்ன செய்யும் என்பதைப் பற்றிய விளக்கத்தை ஆழி.செந்தில்நாதன் அவர்கள் கொடுத்தார். இனிமேல் எந்த மொழியும் மிக உயர்ந்த மொழி என்று சொந்தம் கொண்டாட முடியாது. ஒரு நாட்டிற்கு இணைப்பு மொழி இது, அல்லது உலகத்திற்கே இந்த மொழிதான் இணைப்பு மொழி என்பது எல்லாம் இந்தச் செயற்கை நுண்ணறிவு யுகத்தில் காணாமல் போய்விடும். செயற்கை நுண்ணறிவுக்கு எல்லா மொழியும் ஒன்றுதான்” என்றார்.

மொழி பெயர்ப்பு முயற்சிகளை எல்லாம் தேவையற்றதாக செயற்கை நுண்ணறிவு இயந்திரங்கள் ஆக்கப் போகின்றன. ஆமாம் உலகில் உள்ள அத்தனை மொழிகளிலும் 1330 திருக்குறளையும், சில நிமிடங்களில் மொழி பெயர்ப்புகளை, செயற்கை நுண்ணறிவு இயந்திரம் செய்து முடித்துவிடும்.

நாம் மார்க்சிம் கார்க்கியின் நாவலை – இரஷ்ய மொழியில் இருக்கும் ‘தாய்’ நாவலைத் தமிழ் மொழியின் வாயிலாக செயற்கை நுண்ணறிவு இயந்திரத்தின் வழி படிக்க முடியும். அதில் இருக்கும் ஒரு பாத்திரப் படைப்பைப் பற்றி நாம் தமிழ் மொழியில் விளக்கம் கேட்டால், இரஷ்ய மொழிக்காரர் இரஷ்ய மொழியில் சொல்லும் பதிலை மொழி பெயர்த்து அந்த இயந்திரம் நமக்குத் தமிழில் சொல்லும். உலகில் இனி நாம் தமிழ் மொழியில் பேசி எந்த மொழிக்காரரோடும் பேசமுடியும்.அதாவது நாம் டெல்லி தெருக்களில் போய் தமிழ் மொழியில் கேள்வி கேட்டால் அதனை அந்த இந்திக்காரருக்கு இந்தி மொழியில் அந்தக் கருவி சொல்லும். அவர் இந்தியில் சொல்லும் பதிலைத் தமிழில் மொழிபெயர்த்து நமக்கு அந்தச் செயற்கை நுண்ணறிவுக் கருவி சொல்லும்.

நாம் கைகளில் வைத்திருக்கும் மொபைல் போன்கள் மூலம் ‘ஜிபே’ (GPay) போன்ற செயலிகள் மூலம் பணம் அனுப்புகிறோம்.இரயில் டிக்கட் பதிவு செய்கிறோம். எத்தனையோ காரியங்களைச் செய்கிறோம். அதனைப் போல இந்த செயற்கை நுண்ணறிவு மூலமாக நம் கைகளில் இருக்கப்போகும் ஒரு கருவி மூலமாக மொழிகளைக் கடந்து நாம் பேசுவோம்.மொழிகளைக் கடந்து நாம் இலக்கியங்களைப் படிப்போம். நாம் எழுதும் இலக்கியப் படைப்புகளும் இப்படி உலக மொழிகள் அனைத்திற்கும் போய்ச் சேரும். உலகில் இருக்கும் அத்தனை மனிதர்களுக்கும் போய்ச் சேரும்.’

நாத்திகம் பற்றி உலகில் இருந்த – இருக்கும் எழுத்தாளர்கள் யார் யாரெல்லாம் எழுதியிருக்கிறார்களோ, அதைத் தமிழில் கொடு என்று கேட்டால், உலகில் உள்ள அத்தனை மொழிகளிலும் இருக்கும் ‘நாத்திகம் ‘பற்றிய கவிதைகள், கட்டுரைகள், கதைகள் என அத்தனையையும் அந்தந்த மொழிகளில் இருந்து தமிழுக்கு மொழி பெயர்த்து நமக்குச் சில நிமிடங்களில் கொடுத்துவிடும். இப்பொழுது கூகுள் மூலமாக ஆங்கிலத்தில் இருக்கும் ‘நாத்திகம்’ சம்பந்தப்பட்ட படைப்புகளை எடுக்க முடியும்.அந்தந்த மொழிகளைக் கொடுத்து அந்தந்தப் படைப்புகளை எடுக்கமுடியும். ஆனால் செயற்கை நுண்ணறிவு மூலமாக எந்த மொழியில் இருந்தாலும் அதனை எடுத்து மொழி மாற்றி நமக்குத் தமிழில் கொடுக்கும்,அல்லது எந்த மொழியில் கேட்கிறோமோ அந்த மொழியில் கொடுக்கும்.

“நம் நாடு அமெரிக்காபோல், அய்ரோப்பா போல், ரஷ்யா போல், ஜப்பான் போல் ஆக வேண்டும். ஒருவருக்கு 18 மொழிகள் தெரியும் என்று சொல்வதைவிட, நம் நாட்டு மொழியும், உலக மொழியும் தெரிந்திருந்தாலே போதுமானது என்று நான் கூறுவேன். 18 மொழிகள் பயின்ற பெருமையினால் மக்களுக்கு லாபம் என்ன? அஷ்டாவதனம்,சதாவதானம் போல் – படித்தவனுக்குப் பெருமையே தவிர, யாருக்கு லாபம்? சமுதாயத்துக்கும் நாட்டுக்கும் இலாபம் என்ன? அதைக் கவனித்தே நாம் மொழி விவகாரங்களில் கவனம் செலுத்தவேண்டும்” என்ற தந்தை பெரியார் அவர்கள் ‘மொழி என்பது ஒரு கருவி’ என்றார்.அந்தக் கருவியை எப்படிப் பயன்படுத்துவது என்பதை இந்த செயற்கை நுண்ணறிவு யுகம் ஒரு புதுப்பாதையைக் காட்டியிருக்கிறது.
அறிவு என்பது பொதுச்சொத்து. அந்த அறிவின் மூலமாகக் கிடைக்கும் பலன்கள், வாய்ப்புகள், வசதிகள் உலகில் உள்ள அத்தனை மக்களுக்கும் கிடைக்கவேண்டும். கணினி உலகில் முதன்முதலில் பயனுக்கு வந்தபோது அதனைப் பயன்படுத்துவதில் இந்திய மொழிகளில் முந்திக் கொண்டது தமிழ்தான். 1973ஆம் ஆண்டிலேயே அதற்கான முன்னேற்பாட்டைத் திராவிட இயக்க அரசுகள் முன்னெடுத்தன. டாக்டர் கலைஞர் அவர்கள் தன்னுடைய ஆட்சிக் காலத்தில் கணினிக் கல்விக்கு மிக முன்னுரிமை கொடுத்தார்.1990களில் அதனை விரிவுபடுத்தி பலரும் கணினி கற்க வசதிகள் செய்தார். அதனைப் பயின்றவர்கள் இன்றைக்கு உலகம் முழுவதும் உயர் வருவாய் பெறும் பல்வேறு வேலைகளில் இருக்கின்றனர்.

அதனைப் போல செயற்கை நுண்ணறிவு யுகத்திலும் தமிழர்களும், தமிழும் முந்திக் கொள்வதற்கான பல்வேறு செயல்பாடுகளைத் தமிழ்நாட்டின் திராவிட மாடல் அரசும், உலகின் பல பகுதிகளில் இருக்கும் தமிழர்களும் செய்து கொண்டுள்ளனர். திரு.ஆழி.செந்தில்நாதன் செயற்கை நுண்ணறிவின் மூலமாகச் செய்யப்படும் பன்மொழி பெயர்ப்புக்கான மென்பொருள் நிறுவனத்தை அய்லசா(Ailaysa) என்னும் பெயரில் ஆரம்பித்திருக்கிறார். செயற்கை நுண்ணறிவின் மூலமாக எழுதுதல், மொழி பெயர்த்தல், குரல் வழி எழுதுதல் – செயற்கை நுண்ணறிவு வழிப் படங்கள் உருவாக்குதல் போன்ற பல வேலைகளைச்செய்யும் ஒரு பொதுத்தளமாக, தமிழுக்கு இது உருவாக்கப்பட்டிருக்கிறது என இதன் அறிமுகத்தில் கொடுத்திருக்கிறார்கள்.
தமிழ் இலக்கியமும் தமிழ் மொழியும் பல ஆயிரம் நூற்றாண்டுகள் பழமையுடையன. செம்மொழி இலக்கியங்களைத் தன்னகத்தே கொண்டது தமிழ் மொழி. இந்தச் செம்மொழி இலக்கியங்களை உலகத்தில் உள்ள எந்த மொழிக்காரரும் தமிழ்மொழி அறியாமலேயே படிக்கமுடியும். அதற்கு நிறைய தமிழ்மொழி இலக்கியம் சார்ந்த தரவுகளைக் கணினியில் ஏற்றவேண்டும். அதனைத்தான் செயற்கை நுண்ணறிவு இயந்திரங்கள் பயன்படுத்தும்.ஆங்கில மொழிச்சொற்கள் இணையத்தில் நிறைய இருக்கின்றன. ஆதலால் எந்த மொழியில் இருந்து மொழிபெயர்த்தாலும் அது எளிதாக ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துவிடும். தமிழுக்கும் அதுபோல ஏராளமான சொற்களை நாம் இணையத்தில் தரவுகளாக ஏற்றவேண்டும். அதனைத் தமிழ்நாடு அரசும், தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களும் செய்திட முன்வரவேண்டும் எனத் திரு.ஆழி.செந்தில் நாதன் அவர்கள் குறிப்பிட்டார்.

செயற்கை நுண்ணறிவு யுகத்தில் தந்தை பெரியாரின் கொள்கைகளை எப்படி உலகமெல்லாம் கொண்டு செல்வது என்ற அடிப்படையில் திராவிடர் கழகத் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு, அறிவியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆட்சி, இந்திய ஒன்றியத்திலே அமைய வேண்டும் என்பதற்காகத் தன்னுடைய 91 வயதிலும் தொடர் தேர்தல் பிரச்சாரப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார் அய்யா ஆசிரியர் அவர்கள். இந்தியப் பொதுத்தேர்தல்,அமெரிக்கத் தேர்தல் உள்ளிட்ட அனைத்திலும் செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் இருக்கிறது என்று செய்திகள் கூறுகின்றன. இந்தச் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்னும் திராவிட இயக்கத்தின் நோக்கத்தை அடைய உழைத்திடுவோம். 

நன்றி : உண்மை மாதம் இருமுறை இதழ் ஏப்ரல் 16-30


Sunday 7 April 2024

கவிதை கவிதையாக இருக்குமா?

 

மொழி பெயர்ப்புக் கவிதை

வாசிக்கும் தருணங்களில்

ஏதோ ஒன்று குறைவது

போலவே தோன்றுகிறது…

 

அயல் நாட்டுக் கவிஞரின்

வரிகளை அப்படியே தருவதா?

அவரின் கருத்துகளை உள்வாங்கி

நம் சொற்களில் சொல்வதா?

எனும் குழப்பம் மூலக்கவிஞனின்

கவிதையைக் கொன்று விடுகிறதோ?

 

ஒரு கவிதை  எப்போதும்

எனக்கு ஒரு சித்திரம் …..

முழுமையாகப் பார்த்தபின்பு

எனக்குள் நானே என்னை

வரைந்து கொள்ள

உரிமை அளிக்கும்

சித்திரமாக கவிதை எனக்கு..

எனக்கான உணர்வுகளோ

இணைப்பதற்கு  ஏதும்

இல்லாத 

வெறும்

சொற்களாய் சில

மொழி பெயர்ப்புக் கவிதைகள்…

 

செயற்கை நுண்ணறவு

யுகத்தில்

எல்லாக் கவிதைகளையும்

இயந்திரங்களே

மொழி பெயர்க்கும்

எனச்சொல்கிறார்கள்…

 

ஒற்றைச்சொடுக்கில்

ஒரு நூறு மொழிகளில்

மொழி பெயர்ப்பாகிவிடும்

ஒரு கவிதை என்கிறார்கள்

 

மனிதர்கள் மொழிபெயர்க்கும்

கவிதைகளிலேயே

சாரமற்று

சொற்களின் மொழிபெயர்ப்புகளாய்

சுருங்கி விடும் இக்காலத்திற்கு

மாற்றாய்

இனிவரும் காலங்களில்

இயந்திரங்கள் மொழிபெயர்க்கும்

கவிதைகளில்

உயிர் இருக்குமா?

உள்மனது இருக்குமா?

கவிதை கவிதையாக இருக்குமா?

 

                             வா.நேரு,07.04.2024

 

 

 

Friday 5 April 2024

ஆசிரிய வாழ்வினிது...கலகல வகுப்பறை சிவா

 

சங்கப் பலகை

நூல் அறிமுகம்

நூலின் தலைப்பு ஆசிரிய வாழ்வினிது !

நூல் ஆசிரியர் கலகல வகுப்பறை சிவா

வெளியீடு புக்ஸ் பார் சில்ரன்,சென்னை-18

முதல் பதிப்பு அக்டோபர் 2021 ,63 பக்கங்கள் விலை ரூ. 60.

கலகல வகுப்பறை சிவா அவர்கள் எழுதியிருக்க கூடிய ஆசிரிய வாழ்வினிது!  என்னும் இந்த நூல்  ஒரு ஆசிரியருடைய  பணிக்காலத்தில் ஆசிரியர் மாணவர் உறவுகளில் நிகழ்ந்த பல்வேறு சம்பவங்களை எடுத்துக்காட்டக் கூடிய ஒரு  நூல்.. பள்ளிக்கூடத்திற்குள்ளும்  வெளியிலும் ,மாணவர், ஆசிரியர், பெற்றோர் உடனான சில உரையாடலின் தொகுப்பே இந்த நூல் .இன்றைய சூழலுக்கு மிகத்தேவையான ஒரு  நூலாக எனக்குப் படுகிறது..

இச்சிறு நூலில் உள்ள கட்டுரைகளை வாசிப்பவர்கள், தங்கள் மாணவர்கள் அல்லது  ஆசிரியர்கள் பற்றிய மலரும் நினைவுகளில் மூழ்கினால் அதுவே எனக்கு மகிழ்ச்சி என்னை உயிர்ப்புடன் வைத்திருக்கும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் வகுப்பறைகளுக்கும் பேரன்பின் நன்றிகள் என்று புத்தகத்தின் தொடக்கத்தில் இந்த நூலாசிரியர் குறிப்பிடுகின்றார்.

என்னுடைய  அம்மாவுக்கு வேலை கிடைத்துவிட்டது என்று குதூகலிக்கிறான்  ஒரு மாணவன்., அவனிடம்  என்ன வேலை என்று கேட்கிறார் இவர் . கூட்டும் வேலைஎன்று சொல்கின்றான் , அதற்கு என்ன சம்பளம் என்று கேட்டால், மாதம் 2000 ரூபாய்  என்று சொல்கின்றான் அந்த மாணவன். .” “ஏறத்தாழ எனது ஒரு நாள் சம்பளம் ,ஒரு குடும்பத்தின் மாத வருமானம் அதைக் கொண்டு எங்கள் கஷ்டமெல்லாம் தீரப் போகிறது என்று ஒரு குழந்தை குதூகலிக்கிறது தொடர்ந்த எண்ணங்கள் மனதுள்  பாரமாயின என்று குறிப்பிடுகின்றார்.ஒரு நல்ல புத்தகம் என்பது வாசிக்கும்போது நமக்கும் பல நினைவுகளைக் கொண்டு வந்து கொடுக்கவேண்டும்.மூளை உழைப்பிற்கும் உடல் உழைப்பிற்குமான வேறுபாடு,மரியாதை,ஊதியம் என்று பல்வேறு புள்ளிகளை இணைக்கும் கட்டுரையாக இந்தக் கட்டுரை இருக்கிறது.

ஓர் ஆசிரியர் மேல் ஒரு மாணவன் வைத்திருக்கும் உச்சபட்ச மதிப்பு என்பது தனது துன்பங்களை இவரிடம் பகிர்ந்துகொள்ளலாம் என்று நினைக்கும்  நினைப்பு..ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவன் மெல்ல,மெல்ல இவரின்  அருகில் வருவதும் தயங்கி தயங்கி ஏதோ சொல்ல வரும் பொழுது, பக்கத்தில் இருக்கும் ஆசிரியர்கள் ஏன் இவ்வளவு  நெருக்கமாக வருகிறாய் என்று திட்டுவதும்,அதையும் தாண்டி பக்கத்தில் நெருங்கிய அந்த மாணவன் சார் ,எங்கள் அப்பா இறந்துவிட்டார்  என்று உடைந்த குரலோடு சொன்னபோது தடுத்த ஆசிரியர்களும் கலங்கி நிற்க, “ அவன் கண்களில்  வழிந்த நீர் என் கண்களில் நிறைந்து நின்றது. எத்தனை சூழல்கள், எத்தனை மனநிலைகள், பாடம் சொல்லித் தர மட்டுமா பள்ளி ?குழந்தைகளின் குரல்களை கேட்கும் காதுகளை பள்ளிகள் எங்கும் நிறைக்க வேண்டும் என்று குறிப்பிடுகின்றார். வாசிக்கும்போது நமக்கும்கூட மனம் கனக்கிறது. குழந்தைகளில் குரல்களை கேட்கும் காதுகளை பள்ளிகளுக்குள் எப்படி உருவாக்குவது?அதனை எப்படி வளர்த்தெடுப்பது? ..பதில்களை நாம்தான் தேடவேண்டும்.

தெருவில் பார்த்துவிட்டு ஒதுங்கி ஒதுங்கி போகும் ஒரு மாணவன் பக்கத்தில் நெருங்கும் பொழுது விர்ரென்று பார்க்காமல்  சென்று விடுகிறான் சரி என்று சொல்லி அவனை விட்டு விலகி நடக்கும் பொழுது அருகில் வந்து பேசுகிறான் . இந்தக் கடைக்கு அம்மா சாப்பிட்ட இலை எடுக்க வருவாங்க இன்னைக்கு நான் வந்தேன் கடைக்காரர் ஒரு பொருள் வாங்கிட்டு வரச் சொன்னாரு உதவி கேட்டா செய்யணும் இல்ல ,அதான் நான் வாங்கிட்டு வந்தேன் திடீர்னு உங்கள பார்த்ததும் ஏதோ ஒரு மாதிரி ஆயிடுச்சு அதான்  நிற்காமல் போய்விட்டேன் தப்பா நினைச்சுக்காதீங்க  என்று அந்த மாணவன் சொல்கின்றான்.அடித்தட்டு மக்களின் பிள்ளைகள் எத்தகைய சூழலில் பள்ளிக்கு வருகிறார்கள் என்பதை உணர்த்துவதாக இந்தக் கட்டுரை இருக்கிறது.

இவரிடம்  படித்த மாணவன், ராஜா, திருநங்கையாக மாறி அவனுக்கு உரிய வாழ்க்கையை அவன் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றான்.அவனி(ளி)டம் தொடர்ந்து பேச முயற்சிக்கின்றார். பிளஸ் டூ படித்துக்கொண்டிருக்கிறவன் ராஜா. பிளஸ் டூ முடித்துவிட்டு போ ,அதற்குப் பின் உனது விருப்பப்படி இரு என்று போனில் சொல்கின்றார். நான் வரவில்லை  என்று சொல்லி ராஜா தொடர்பைத் துண்டித்துவிடுகின்றான். புரிந்து கொள்ளாத குடும்பம், கேலி பேசியே கொள்ளும் சமூகம், இதற்கு இடையில் பள்ளிக்கு வந்து செல்லும் ராஜா திடீரென நின்று கொள்வதும், அதற்குப்பின் அவனை அழைத்து வர செய்த முயற்சிகள் பயன் அளிக்காமல் போனது பற்றியுமான   வாழ்க்கைத் தேர்வுஎன்னும் இந்தக் கட்டுரை நிரம்பவே யோசிக்க வைக்கின்றது..

  சமூக ஆசிரியர்என்று ஒரு கட்டுரை இருக்கிறது ஓடி ஓடி உதவும் தூத்துக்குடியைச் சார்ந்த டேவிட் என்பவரைப் பற்றிய கட்டுரை.அவர் இவரது பள்ளியில் ,தான் செல்லும் வகுப்புகளான 9,10 வகுப்பு மாணவர்களிடம் டேவிட்டைப் பேச வைக்கின்றார்.டேவிட் பேசுகின்றார்.தனது படிப்பைப்  பதினொன்றாம் வகுப்பிற்குப் பின் தொடர இயலாத காரணம், படிப்பின் மீதான ஆசையே மற்றவர்களை படிக்க வைப்பதாக மாறியது என்று பல செய்திகளை மாணவருக்கு சொன்னார்  என்று அவரைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.தனக்கு என்ன கிடைக்கும் என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் மாணவர்களின் கல்விக்கு உதவும் எவரும் மனதில் நிற்கிறார்கள்.மீனவரான அவரிடம் மாணவர்கள் விதம் விதமாகக் கேள்வி கேட்கிறார்கள்.கடலில் எப்படி எல்லை தெரியும்?,புயலில் சிக்கிய அனுபவம் உண்டா?கடலுக்குள் சென்று மீன் பிடிப்பதில் பெண்கள் ஈடுபடுகிறார்களா?உங்களுக்குப் பிடித்த பாடம் கணக்கு என்று சொன்னீங்க.அது எப்படி பிடிச்ச பாடமாக ஆனது?புத்தக வாசிப்பில் எப்படி ஆர்வம் வந்தத்? மத்தவங்களைப் படிக்கவைக்க காரணம் என்ன?”போன்ற கேள்விகளுக்குப் பதிலோடு இறையன்பு எழுதிய புத்தகம்,சங்கு என்று பரிசுகளும் கிடைத்தன என்று குறிப்பிடுகிறார்.

தக்காளி செந்தில் என்னும் ஒரு கட்டுரை செந்தில் என்பவரைப் பேசுகிறது. அவனது செல்லப்பெயர் தக்காளி’,உணமைப் பெயர்  செந்தில் என்று விவரிக்கும் இந்தக் கட்டுரை முதலில் அவன் என்று சொல்லி ஆரம்பிக்கிறது  பாதிக்குப்பின்  அவர்  என்று மாறுகிறது தக்காளி என்று புனை பெயரால் அழைக்கப்பட்ட அந்த மாணவனுடைய  உடல் கோளாறு, அந்த உடல் கோளாறை மீறி இவரது அணுகுமுறையால் அவன் வெற்றிபெறுவது,  இப்படி வெற்றி பெற்ற பின்பு  தனது பகுதியில் படிக்கும் பல மாணவ,மாணவியர்களுக்கு அவன் உதவி செய்வது  என்று விவரிக்கின்றது

ஒரு பெண் திடீரென்று  இவரது காலில் விழுகிறார் .அவள் யார் என்று இவருக்குத் தெரியவில்லை.  நீ  யார் என்று இவர் கேட்க  சார் ,நான் இன்ஜினியரிங் படிக்கிறேன் செந்தில் அண்ணனால்தான்  நான் படிச்சேன் நீங்க அவரோட சார் உங்களால்தான் அவர் படித்தேன் என்று எங்களிடம் சொல்வார்.அதனால் உங்கள் காலில் விழுந்தேன் என்று சொல்லும்  நிகழ்வு வாசிக்கும்  நம்மையும் கூட சிலிர்க்க வைக்கிறது

 செல்பேசி ஒலித்ததில் திடுக்கிட்டு எழுந்தேன்.அழைப்பு நின்றிருந்தது.யாரென்று பார்த்தேன்.மாணவனின் எண்.நேரம் இரவு மூன்று மணி என்று ஆரம்பிக்கும் அப்பா பிள்ளை என்னும் கட்டுரை அப்பா,அம்மா சண்டைக்கு இடையில் மாட்டிக்கொள்ளும் மாணவனைப் பற்றிப் பேசுகிறது.அப்பாவோடு இருக்கிறான் என்றாலும் அவனுக்கு அதில் மனம் ஒப்பவில்லை.அப்பாவும் வேணாம்,அம்மாவும் வேணாம், நான் தனியாக இருந்துகொள்கிறேன் என்று சொல்லும் மாணவனை இவர் அணுகும் விதமும் ஆற்றுப்படுத்தும் விதமும் சிறப்பாக இருக்கிறது.பகல் பொழுதில் குழந்தைகளுக்குப் பாதுகாப்பான இடமாகவும், ஆறுதலான இடமாகவும் பள்ளி இருக்கிறது அதை முழுமையாக்குவதில் நமது பங்கு முக்கியமானது .குழந்தைகளின் சேட்டை, கற்றலில் ஆர்வமின்மை ஆகியவற்றிற்குப்  பின்னால் என்ன காரணம் இருக்கிறது? என்பதை அறிவதும் எனது கடமை என்று மனதில் தோன்றியது  என்று நூலாசிரியர் குறிப்பிடுகின்றார். தன்னை ஒத்த அத்தனை ஆசிரியப்பெருமக்களுக்கும் கூறுகின்ற அறிவுரையாகவும் இதனை எடுத்துக்கொள்ளலாம்.

 

கடளானியான அப்பா ஊரை விட்டு ஓடிப்போய்விட துன்பப்படும் மாணவன்,அவனது அம்மா பற்றிய விவரிக்கின்ற கட்டுரை காலம் காலமாக என்னும் கட்டுரை.பொருளியல் சார்ந்து நிகழும் துன்பங்களை,அதனால் சுமைதாங்கிகளாக மாறிப்போகும் அம்மாக்களைப் பற்றி இந்தக் கட்டுரை பேசுகிறது. அப்பா எங்கே?” என்றேன்.அழத்தொடங்கினான்.கண்ணீரின் கதைகளை உணரும் சக்தியற்றுக் கலங்கி நின்றேன்.எனக்குப் பேச்சு வரும்வரை அவன் முதுகில் தட்டிக்கொண்டிருந்தேன் என்று குறிப்பிடுகின்றார். முடிவில் வார்த்தைகளைத் தவிர வேறு என்ன தந்து விட முடியும் ?சங்க காலத்தில் இருந்தே அதே நிலை தான் என்று குறிப்பிடுகிறார்.

தமிழ்நாட்டில் கட்டாயமாக இந்திய ஒன்றிய அரசால் திணிக்கப்பட்டிருக்கும் நீட் தேர்வு ,மாணவ,மாணவிகளை அறிவியல் பாடத்தைப் படிக்காமலே தவிர்க்கச்செய்யும் எதார்த்தத்தை அறிவியல் படிச்சா கஷ்டம் என்னும்  கட்டுரையில் பேசுகின்றார். எங்கள் பள்ளியிலேயே காமர்ஸ் பிரிவில் 100 பேர் அறிவியல் பிரிவில் 20 பேர் நிறைய மதிப்பெண்கள் எடுத்தவர்களையும் பயப்பட வைக்கிறது நீட் அறிவியல் பாடங்கள் புறக்கணிக்கப்படுவது எதிர்காலத்தில் பேராபத்துகளை உண்டாக்கும் என்று கள நிலவரத்தை கட்டுரையாகப் பதிவு செய்திருக்கிறார்.

ஒரு ஆசிரியராக , இந்த புத்தகத்தில் நாட்குறிப்பு மாணவர்கள் எழுதச் செய்யும் வழிமுறைகள் பற்றி பல்வேறு இடங்களில் குறிப்பிடுகின்றார் மாணவ,மாணவிகள் நாட்குறிப்பு எழுதுவதன் பலனை,அதனால் ஏற்பட்ட விளைவுகளை எல்லாம் விரிவாக எழுதியிருக்கின்றார். நான் இதுவரை படித்த கல்வி சம்பந்தப்பட்ட நூல்களில் இல்லாத ஒரு வழிமுறை ,இந்த நாட்குறிப்பு எழுதுவது.இவரது எழுத்துக்களின் மூலம் மிக நேர்மறையான அணுகுமுறை , நாட்குறிப்பு எழுதுவது என்று தோன்றுகிறது.

கூட்டாஞ்சோறு, மகள்களைப் பெற்ற அப்பா, நீ சரி ,பஞ்சாயத்து, படிக்கச் சாப்பிடு, என் ஆசான் ஒரு  தேவதை போன்ற கட்டுரைகளும் மனதில்  நிற்கின்றன.

ஒரு மாணவனின் நிலையில் தன்னை பொருத்தி,அதற்கேற்றார்ப்போல் பல்வேறு செயல்பாடுகளைப் பேசும் இந்தச்சிறிய நூல் ஒரு ஆசிரியரின் வாழ்க்கை எவ்வளவு இனிதானது,மகிழ்ச்சியானது,உற்சாகமானது, உதவுக்கூடியது என்பதை வெறும் பாடமாக மட்டும் சொல்லாமல், வாழ்க்கையில் ,வகுப்பறையில் நடந்த நிகழ்வுகளோடு ஒப்பிட்டுச்சொல்வதால் இந்த நூலும் கூட வாசிக்க,வாசிக்க இனிக்கிறது














                                                                






நன்றி: வல்லினச்சிறகுகள்- மார்ச் 2024 அச்சு இதழ்.