Sunday 28 April 2013

அண்மையில் படித்த புத்தகம் : சிங்கப்பூர் வாங்க !

அண்மையில் படித்த புத்தகம் : சிங்கப்பூர் வாங்க !

நூலின் தலைப்பு : சிங்கப்பூர் வாங்க !
நூல் ஆசிரியர்கள் : ஜெயந்தி சங்கர் , ரம்யா நாகேஸ்வரன்
வெளியீடு                 : விகடன் பிரசுரம்
முதல் பதிப்பு          : ஆகஸ்ட் ,2006 , 175 ப்க்கம் , விலை ரூ 80

                                                                             சிங்கப்பூர் அன்புடன் வரவேற்கிறது என்னும் தலைப்பில் நூல் ஆசிரியர்கள் , ஜெயந்தி சங்கர் &  ரம்யா நாகேஸ்வரன் ஒரு நல்ல முன்னுரையைக் கொடுத்து ' இந்தியருக்கு சிங்க்ப்பூர் இன்று அண்டை வீடாகிப்போனது .சுற்றுலாப் பயணியாகவும், மாணவனாகவும் மற்றும் பிழைப்புத் தேடி வருவோருக்கும் சிங்கப்பூர்தான் முதல் தேர்வு " என்பதனைச்சொல்லியிருக்கிறார்கள் . ஏன் என்பதனை மிக விளக்கமாக 14 தலைப்புகளில் நூலின் உள்ளே விவரித்திருக்கின்றார்கள்.

                                அறிமுகம் என்னும் பகுதியில் சென்னையிலிருந்து விமானத்தில் எவ்வளவு நேரப்பயணம் என்பது முதல், சிங்கப்பூரில் எது எதற்கெல்லாம் பைன் கட்டவேண்டும் என்பதனை முன்கூட்டியே கொஞ்சம் நம்மை உஷார் படுத்தி, சிங்கப்பூர் வெள்ளி பற்றியும் , இங்கிலீசு சிங்கிலீசு பற்றியும் நல்ல கல கலப்பாகவே சொல்லியிருக்கின்றார்கள். 2-ம் அத்தியாயத்தில் சிங்கப்பூரின் வரலாறு பழையது ,புதியது இரண்டையும் கொடுத்து எப்படி அது சவால்களை சந்தித்து வென்றிருக்கிறது என்பதனையும் , சிங்கப்பூரின் சிற்பியான லீ க்வான்யூ எப்படி சிங்கப்பூரின் இன்றைய வளர்ச்சிக்கு அடிகோலினார், வளர்த்தார் என்பதனையும் புள்ளி விவரங்களோடு கொடுத்திருக்கின்றார்கள்.

                       3-ம் அத்தியாயத்தில் பண்டிகைகள், சீனப்புத்தாண்டுக் கொண்டாட்டம், வேற்றுமையிலும் எப்படி ஒற்றுமையோடு இருக்கின்றார்கள், வித விதமான சாப்பாடு , அது கிடைக்குமிடம் எனப் பட்டியலிட்டு அசத்தியிருக்கின்றார்கள். 4--ம் அத்தியாயத்தில் நம்பிக்கைகள், பலன்கள்  என்று தொகுத்து தந்துள்ளார்கள். நாய் ,பன்றி ,எலி,காளை ....என்னும் ஆண்டுகளில் பிறந்தவர்களுக்கு எப்படி இருப்பார்கள் என்று நம்பும் நம்பிக்கைகளை சுட்டிக்காட்டியுள்ளார்கள்.இந்த புத்தகத்தில் இந்த விவரங்கள் இவ்வளவு விரிவாக நம்மூர் ராசி பலன் மாதிரி தேவையில்லை என்பது என் கருத்து.
                  சுற்றுலா சென்றால் பார்க்க வேண்டிய இடங்கள் பற்றியும் , ஷாப்பிங் செல்ல   இருக்கும் இடங்கள் பற்றியும் அத்தியாயம் 5 மற்றும் 6-ல் விவரித்துள்ளார்கள்.

               அண்டை நாடுகள் என அத்தியாயம் 7-ல்  மலேசியா, தாய்லாந்து மற்றும் பல்வேறு நாடுகளைப் பற்றிய தகவல்கள், எப்படி அந்த நாடுகளுக்கு சிங்கப்பூரிலிருந்து செல்வது போன்ற விவரங்கள் உள்ளன. குட்டி குட்டி நாடுகளைப் பற்றிய விவரங்களைப் படிக்கும்போது, எதிர்காலத் தமிழ் ஈழமும் பக்கத்து நாடாக அமையும் என்னும் நம்பிக்கையும் , சிங்கப்பூர் போல உலகில் அது புகழ்பெறும் என்னும் எண்ணமும் பிறக்கிறது.

               அத்தியாயம் 8-ல் கல்வி முறை பற்றிய விரிவான தகவல்களைக் கொடுத்திருக்கின்றார்கள். இந்த அத்தியாயத்தை மட்டும் எடுத்து நமது கல்வியாளர்களிடம் கொடுக்கலாம். நமக்கும் அவர்களுக்கும் கல்வி முறையில் எப்படி வேறுபாடு, எப்படி அவர்களின் கல்வி அவர்களை உயர்த்துகிறது என்பதனை சொல்லும் விதம் அருமை. " மாணவன் 'என்ன' கற்கிறான் என்பதை விட 'எப்படி' கற்கிறான் என்பதே வலியுறுத்தப்படுகிறது.(பக்கம் 85 ).அதனைப்போலவே கலைப்பள்ளிகள் பற்றியும் அதனைக்கற்றவர்களுக்கு உள்ள வாய்ப்புகள் பற்றியும் அடுத்த அத்தியாயம் பேசுகின்றது.

          சோசியல் விசிட், வேலை வாய்ப்பு, வேலை மற்றும் தகுதி போன்ற அத்தியாயங்கள் எப்படி மாணவர்கள் சிங்கப்பூரில் படிப்பது, எந்தத் தகுதி உள்ளவர்கள் எப்படிப்பட்ட வேலைகளைப் பெறலாம் சிங்கப்பூரில் பொன்ற பல உபயோகமான செய்திகளைக்கொடுத்ததோடு, முகவரிகள், இணையதள முகவரிகள் போன்றவற்றைக் கொடுத்திருப்பது பாராட்டுக்குரியது.குட்டி இந்தியா என்ற தலைப்பில் இந்தியாவில் நடப்பது போன்ற கோயில் விழாக்கள், ஒரு பகுதியைச்சேர்ந்தவர்கள் ஒன்று கூடுவது , ஊருக்குப்போகும்போது என்ன வாங்கிக்கொண்டு போகலாம் என்ப்தையெல்லாம் கொடுத்திருக்கின்றார்கள்.

                         கடைசி அத்தியாயத்தில் சிங்கப்பூரில் எப்படி தொழில் முதலீடு செய்யலாம்?எப்படி துவங்கலாம்? என்னென்ன திட்டங்கள் இருக்கின்றன என்பதையும் கொடுத்திருக்கின்றார்கள்.ஏஜெண்டுகளை நம்பி ஏமாறுவதை விட சிங்கப்பூர் செல்ல நினைப்போர் இந்தப் புத்தகத்தைப் படித்தால் தெம்பாக சிங்கப்பூர் சென்று வரலாம்.  என்னுடன் வேலை பார்க்கும் பொறியாளர் தோழர் ச.திருநாவுக்கரசு அவர்கள் இந்த நூலைக் கொடுத்து படிக்கச்சொன்னார்.நல்ல நோக்கத்தோடு , நல்ல முறையில் எழுதப்பட்டுள்ள புத்தகம் . படித்துப்பாருங்கள்.

No comments: