Saturday 22 June 2013

மாணவனை மறைமுகமாய் கழுவேற்றி .....



நோயாளிகளை
வலுக்கட்டாயமாய்
வெளியேற்றிவிட்டு
ஆரோக்கியமானவர்களை
மட்டுமே
வைத்துக்கொள்ளும்
மருத்துவமனைகளோ
பள்ளிக்கூடங்கள் ?

நானூற்றி அறுபதுக்கு
குறைவாய் மதிப்பெண்ணா ?
மிதியாதீர் எங்கள்
பள்ளியின் வாசலை
வாங்காதீர் மாணவர்
சேர்க்கை விண்ணப்பங்களை
கட்டளையிடும் பள்ளிகளுக்கு
முன்னால் இரவும்
பகலுமாய் காத்திருக்கின்றார்கள்
பெற்றோர்கள் ?

படிக்க இயாலதவனை
படிக்க வைக்கத்தான்
பள்ளிக்கூடம் என நினைத்தோம்
நன்கு படிக்கும்
மாணவனை மறைமுகமாய்
கழுவேற்றி
நகலெடுக்கும் எந்திரமாய்
அவனை மாற்றி
வென்றெடுத்தோம்
முதலிடத்தை என
செய்தித்தாளில் மார்தட்டி
பணம் குவிக்கும்
மதுக்கடைகளாய்
பள்ளிக்கூடங்கள் மாறிப்போன
மர்மம் என்ன ?

மதுக்கடைக்கு முன்
குவியும்
குடிகாரர்கள் போல்
செய்தித்தாளில் வரும்
பள்ளிகளுக்கு முன்
குவியும் பெற்றோர்கள் காரணமோ?
அரசுப் பள்ளிகளை
அல்ட்சியப்படுத்தும்
ஆட்சி முறை காரணமோ ?
ஏன் இந்த நிலை எனும்
காரணத்தை அறிவோமோ ?
களைந்திடவே இணைந்து
நாம் ஏதேனும் செய்வோமோ ?


நீயாக யோசிக்காதே !
மற்ற எதையும் வாசிக்காதே !
வகுப்பறைக்கு வெளியில்
கூடப்பேசாதே !'
எவரோடும் பேசிச்சிரிக்காதே !
பள்ளி சொல்வதைக் கேள்
மனனம் செய் ! மனனம் செய் !
பிள்ளைகள் மனதால்
நொந்தாலும் வெந்தாலும்
பரவாயில்லை
என நினைக்கும் பெற்றோரே
உள்ளத்தால் மாறுங்கள் !

மதிப்பெண் மட்டுமா வாழ்க்கை !
பிள்ளைகளின் வசந்த காலத்தை
இருண்ட காலமாய் ஆக்காதீர்!
விரும்பிய பாடம் படிக்கட்டும்
விருப்பப்படி படிக்கட்டும் !
படித்தவர் எல்லாம் ஜெயித்ததில்லை !
ஜெயித்தவர் பலபேர்
நன்கு படித்ததில்லை !
திணிக்காதீர் உங்கள் கனவுகளை
உங்கள் பிள்ளைகளின் மேல் !

எழுதியவர் : வா. நேரு
நன்றி : எழுத்து.காம்

2 comments:

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை said...

"பணம் குவிக்கும்
மதுக்கடைகளாய்
பள்ளிக்கூடங்கள் மாறிப்போன
மர்மம் என்ன ?"

"மதிப்பெண் மட்டுமா வாழ்க்கை !
பிள்ளைகளின் வசந்த காலத்தை
இருண்ட காலமாய் ஆக்காதீர்!
விரும்பிய பாடம் படிக்கட்டும்
விருப்பப்படி படிக்கட்டும் !
படித்தவர் எல்லாம் ஜெயித்ததில்லை !
ஜெயித்தவர் பலபேர்
நன்கு படித்ததில்லை !
திணிக்காதீர் உங்கள் கனவுகளை
உங்கள் பிள்ளைகளின் மேல் !"

இவை கவிஞர் வா.நேருவின் கவிதைவரிகளே அல்ல...
காலத்தின் கேள்விகள்...
'Great men Think Alike" என்பார்கள்,
நான் -உண்மையிலேயே- தோழர் நேரு அளவிற்குப் பெரிய சிந்தனையாளனல்லன்.
ஆனால், என்னவோ தெரியவில்லை...
இந்த இரண்டு கேள்விகளும் என்னையும் குடைந்ததில் நான் எழுதிய கட்டுரைகள் இரண்டும் இதே கருத்தில் அமைந்துவிட்டன...

அருமைத் தோழர் நேரு,
பாருங்களேன் எனது பதிவுகளை..

உங்களின் முதல் கேள்விக்கு எனது-
http://valarumkavithai.blogspot.in/2013/06/blog-post.html பதிவையும்,

இரண்டாவது கருத்துக்கு எனது- http://valarumkavithai.blogspot.in/2013/06/blog-post_9.html பதிவையும் பார்க்குமாறு அன்புடன் அழைக்கிறேன்.

நாம் இருவரும் ஒரே திசையில் ஒரே படகில்தான் பயணிக்கிறோம் தோழரே!
(துடுப்பு அமைப்பில்தான் வேறுபாடு, அது பெரிதா என்ன?)

நெஞ்சம் நிறைந்த பாராட்டுதல்களுடனும்,
மிகுந்த தோழமையுடனும்,
நா.முத்துநிலவன்,
புதுக்கோட்டை

முனைவர். வா.நேரு said...

நன்றி ! தோழரே , கவிதையைப் படித்து கருத்து கூறியதற்கு. முதல் கட்டுரையை ஏற்கனவே படித்திருந்தாலும் , முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே என்னும் கட்டுரையை இப்போதுதான் படித்தேன். அருமையாகவும், விரிவாகவும் அமைந்த கட்டுரை.தெளிவாக செய்தியினை எடுத்து வைத்திருக்கின்றீர்கள். வாழ்த்துக்கள் தோழரே! விதைப்போம், 'எல்லோருக்கும் எல்லாம் ' என்னும் அறுவடை ஒரு நாள் உறுதியாக அமையும் என்னும் நம்பிக்கையோடு.