Tuesday 11 February 2014

அண்மையில் படித்த புத்தகம் : ஆழத்தை அறியும் பயணம்-பாவண்ணன்

அண்மையில் படித்த புத்தகம் : ஆழத்தை அறியும் பயணம்
ஆசிரியர்                                          :  பாவண்ணன்
பதிப்பகம்                                         : காலச்சுவடு
முதல் பதிப்பு                                  : டிசம்பர் 2004 , 242 பக்கங்கள், விலை ரூ 140
மதுரை மாவட்ட மைய நூலக எண்: 167300

                                                                    படித்து முடித்தவுடன், கட்டாயம் விலைக்கு வாங்கி வீட்டில் வைக்க வேண்டும் என்று நினைத்த புத்தகம். தான் படித்த, தன் மனதைப் பாதித்த ஒரு எழுத்தாளரின் சிறுகதை, அச்சிறுகதையோடு தொடர்புடைய தன்னுடைய வாழ்வில் நிகழந்த நிகழ்வு, இரண்டையும் இணைத்து  ஓர் ஆழமான இலக்கியத் தேடல் பயணமாக இந்த நூலைக் கொடுத்துள்ளார் பாவண்ணன். நல்ல முயற்சி, அருமையான சிறுகதைகளின் கதைச்சுருக்கமும், அக்கதைகளை எழுதிய ஆசிரியர் பற்றிய குறிப்புகளும் , அந்தச் சிறுகதைகள் சொல்லும் சேதியை தன் வாழ்வோடு  பொறுத்திப்பார்க்கின்றபோது எழும் சிந்தனைகளும், அதை நேர்த்தியோடு சொல்லும் விதமும்  அருமை, அருமை, பாவண்ணன், அருமை.

                                               தமிழகத்தைச்சேர்ந்த 25 எழுத்தாளர்களின் கதைகள், அயல் தமிழ்ச்சிறுகதைகள் எனத்  தமிழ் ஈழம்-இலங்கையைச்சேர்ந்த 8 எழுத்தாளர்களின் கதைகள், பிறமொழிக் கதைகள் என இந்தியாவின் பிற மாநில மற்றும் அயல் நாட்டைச்சேர்ந்த 10 எழுத்தாளர்களின் கதைகள் என மொத்தம் 43 கதைகள். பொறுக்கி எடுக்கப்பட்ட கதைகளாக உள்ளன. ' சிறுவனாக இருந்த காலம் முதல் இன்றுவரை படிப்பதில் என் ஆர்வம் தணியாத ஒன்றாகவே இருக்கிறது. படிப்பதை அசைபோடும் தருணங்களில் ஒன்றை இன்னொன்றுடன் இணைத்தும் வேறொன்றுடன் மாறுபடவைத்தும் யோசிப்பதும்கூடப் பழகிவிட்டது' என்று தன் முன்னுரையில் பாவண்ணன் கூறுகின்றார். ஆனால் அவரின் பழக்கம், பதிவாகி ,புத்தகமாகி கையில் வந்தபோதுதான் அது எவ்வளவு பெரிய நல்ல பழக்கம் எனப்புரிகின்றது.

                                                          ஜாதி உணர்வை விடமறுக்கும் மனிதர்களைப் பற்றிய கதையான அ. .மாதவையரின் 'ஏணியேற்ற நிலையம்' பற்றிச்சொல்லி வெட்ட வெட்ட முளைக்கும் புல், களை போலவே மனிதர்களின் மனங்களில் ஜாதி உணர்வு இருப்பதைச்சுட்டுகின்றார். பி.எஸ்,இராமையாவின் 'நட்சத்திரக் குழந்தைகள்'  கதையோடு தன் மகனுக்கும் தனக்கும் நடந்த்  கடவுள் பற்றிய உரையாடலை பாவண்ணன் காடுகின்றார். த. நா. குமாரசாமியின் 'சீமைப்பு ' கதைக் கருவோடு தன் நணபர் கிராமத்தில் வாங்கிய ஒரு ஏக்கர் நிலத்தையும் அதனைப் பார்த்துக்கொள்ள குடிசையோடு அமர்த்தப்பட்ட அவரின் தம்பியையும் ஒப்பிடுகின்றார். இப்படி ஒவ்வொரு கதையைப் பற்றியும் அவரின் விவரிப்பும் ஒப்பிடலும் மிக இயல்பாக உள்ளன். படிக்கும் நமக்கும் , நாம் படிக்கும் ஒவ்வொரு கதையையும் நமது வாழ்வோடு ஒப்பிட்டு, மேலும் உணர்வதற்கும் பிறருக்கு உணர்த்துவதற்கும் தூண்டுகின்றன.

                                                            ஒவ்வொரு சிறுகதையையும் விவரித்துச்சொல்ல ஆசைதான் . மொத்தம் 43 பாராக்கள் ஆகிவிடும்.  உண்மையிலேயே 'ஆழத்தை அறியும் பயணம்'தான் இந்தப் புத்தகம். வாங்கிப் படிக்கலாம். படித்து படித்து இரசிக்கலாம். வெளியிட்ட காலச்சுவடு பதிப்பகத்தையும் பாராட்ட வேண்டும்.

2 comments:

கருப்பையா.சு said...

ஒரு படைப்பாளனின் வெற்றி என்பது அவன் சுட்டிக்காட்டிய கருத்தை எத்தனை பேர்கள் உள்வாங்கி கொண்டு செயல்படுத்தி வாழ்கிறார்கள் என்பதில் தான் இருக்கிறது. இது வரை தமிழ் இலக்கியத்தில் எத்தனை இலக்கிய வாதிகள் வந்து, மறைந்திருக்கிறார்கள். சாதி ஒழிப்பு, தீண்டாமைக் கொடுமை, முறையற்ற பாலியியல் , மூட நம்பிக்கைகள் பற்றி எத்தனை சிறுகதைகள், நாவல்கள், வெளிவந்திருக்கின்றன. இருந்தாலும் இவைகளில் முன்னேற்றம் தெரிகிறதா?. இல்லையே! இது ஏன்?. நம் மக்கள் மனதில் மாற்ற முடியாத பல குப்பைகள் ஏற்றப் பட்டுள்ளது. அவைகளை சுத்தப்படுத்த மிகப் பெரிய விழிப்புணர்ச்சி தேவைப் படுகிறது. அவற்றை விதைக்க பல சமூக இயக்கங்கள் தேவை. இது போன்ற நல்ல படைப்பிலக்கியங்களையும் மக்கள் மனதில் விதைக்க வேண்டும்.

முனைவர். வா.நேரு said...

கொடுமைகளுக்கு எதிராகப் போராடவும், வாதாடவும் எழுத்து ஒரு மிகப்பெரிய ஆயுதம். பத்திரிக்கைகள் பலவும் பார்ப்பனர்கள் கையில், எழுத நினைக்கும் பலரும் அவர்கள் கைப்பாவைகளாய். இணையத்தில் வலைத்தளங்கள் வந்தபிறகு எழுதியதை வெளியிட எவரின் தயவும் தேவையில்லை என்று ஆகியிருக்கின்றது. பலரும் எழுதுகின்றார்கள். விடியும் ஒரு நாள் உறுதியாய்....