Sunday 2 March 2014

அண்மையில் படித்த புத்தகம் : ஜெயிப்பது நிஜம் - இன்ஸ்பயரிங் இளங்கோ

அண்மையில் படித்த புத்தகம்  : ஜெயிப்பது நிஜம்
ஆசிரியர்                                          :   இன்ஸ்பயரிங் இளங்கோ
பதிப்பகம்                                         :    கிழக்கு பதிப்பகம்- சென்னை-14. 044-42009601
முதல் பதிப்பு                                 :    ஜனவரி  2014 ,144 பக்கங்கள், விலை ரூ 100.

                                                               அனைத்திலும் இருந்து மாறுபட்ட புத்தகம் என்று கொடுத்திருக்கின்றார்கள். உண்மைதான். மற்ற சுய முன்னேற்ற நூல்கள் போல் இல்லாமல் மாறுபட்டதாக இந்தப் புத்தகம் அமைந்ததற்குக் காரணம் இது இன்ஸ்பயரிங் இளங்கோவின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களின் தொகுப்பு என்பதால் மட்டுமல்ல , புத்தக வரிகளுக்குள் புதைந்து கிடக்கும் உண்மையாலும்தான் எனலாம்..

                                 நான் மாற்றுத் திறனாளி அல்ல சிறப்புத்திறனாளி எனத் தன்னை அழைத்துக்கொள்ளும் இளங்கோவின் தன்னம்பிக்கை , இந்த நூல் முழுவதும் விரவி  வாசிப்பவர்களைத் தன் வசம் ஆக்கிக் கொள்கிறது. அறிஞர் அண்ணாவின் மேற்கோளை உதாரணம் காட்டி , வாழ்தல் வேறு, இருத்தல் வேறு என்பதனை முன்னுரையில் விளக்கும் இளங்கோ, வாழ்தல் எப்படி என்பதனை தன் வாழ்வின் வெற்றிப்படிக்கட்டுகளில் இருந்து விளக்கிச்செல்வது எதார்த்தமாகவும், இயல்பாகவும் இருக்கிறது.

                               முதல் அத்தியாயத்தில் தன்னை ராக்கிங் செய்யும் ராபர்ட் என்னும் சீனியர் மாணவனை, இளங்கோ எதிர்கொண்டவிதம் அருமை. எதிராளியை நிலைகுலைய வைக்கும் ராபர்ட்டை நிலைகுலையச்செய்த அவரின் அணுகுமுறை மீண்டும் மீண்டும் படிக்கத்தூண்டியது . "என்ன அப்பா, இவ்வளவு ஆர்வமா இந்தப் புத்தகத்தை படிச்சிக்கிட்டு இருக்கீங்க", என்று தன் கையில் வாங்கிய என் மகள் அறிவுமதி முழுவதுமாக படித்து விட்டுத்தான் என் கையில் கொடுத்தார். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்னும் 20 நாளில் இருக்கும் நிலையில், பாடத்தை மறந்து அவரைப் படிக்கத்தூண்டியதாக இந்தப் புத்தகம் அமைந்தது. படித்து முடித்து சில பகுதிகளைத் தன் தாயாரிடமும், தன் அண்ணனிடமும் படித்துக் காண்பித்துக்கொண்டிருந்ததைப் பார்த்ததும், இந்தப் புத்தகம் செய்யும் வேலை எனக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. அந்த அளவிற்கு ஈர்ப்பும், உண்மையுமாக இந்தப் புத்தகம் அமைந்துள்ளது. சூப்பர் இன்ஸ்பயரிங் புத்தகம்தான்., ".' வாழ்ந்து காட்டுவதை விட பழிவாங்கும் செயல் எதுவுமில்லை ' என்பதை அழுத்தந்திருத்தமாக நம்புகிறவன் நான் , எனவே வாருங்கள் வாழ்ந்து காட்டுவோம் " என்று இளங்கோ கூறுவது , சின்னச்சினன சொற்களுக்குக்கூட உடைந்து போகும் இன்றைய இளையதலைமுறை கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.

                                            தன்னை மேம்படுத்திய ஆசிரியரையும்(டிசில்வா), தன்னை சிறுமைப்படுத்திய ஆசிரியரையும்(கணக்கு வாத்தியார்) இந்தப் புத்தகத்தில் குறிப்பிடுகின்றார். மற்ற மாணவர்கள் மத்தியில் சிரிப்பு ஒலி எழுப்புவதற்க்காக தன்னை கேலி செய்யும் ஆசிரியரை, மதிப்பெண் எடுத்துக்காட்டி எதிர்கொண்ட விதம் -நயத்தக்க நாகரீகம். தொலைபேசியில் பேசும்போது கவனிக்க வேண்டியவை, உடை அலங்காரத்தில் கவனிக்க வேண்டியவை, உடற்பயிற்சியின் முக்கியத்துவம், அடுத்தவர்களின் நேரத்தை மதிப்பது, உறவுகளை எப்படிப் பேணிப்பாதுகாப்பது போன்ற பல நடைமுறைச்சிக்கல்களையும், அதன் தீர்வாக அவர் வாழ்க்கையில் கைக்கொண்ட வழிமுறைகளையும் அதனால் பெற்ற நன்மைகளையும் இயல்பாகச்சொல்லிச்செல்கின்றார்.

                                                 ஒரு விரலால் ஜெயித்த மாலினி சிப் போலத் தன் வாழ்வில் ஏற்பட்ட  குறைபாடு தன்னை சுய பச்சாதபம் ஏற்பட வைக்காமல், நான் வெற்றி பெறப்பிறந்தவன் என்னும் மனப்பான்மையோடு வெற்றி பெற்ற வரலாறும், இந்த உலகத்திலேயே மிக மகிழ்ச்சியானவன் தான் என்னும் மனப்பான்மையும் , இளங்கோ பார்வையற்றவர் என்னும் குறைபாடே இல்லாமல் மனதளவில் வாழ்வதும் படிப்போரை ஈர்க்கும்.ஆங்கிலத்தில் Ph.D, பல விருதுகள், பல பேருக்கு வேலை கொடுக்கும் இளங்கோ, பல ஆயிரக்கணக்கானோர் மத்தியில் சிறப்புரை ஆற்றும் இளங்கோ என அவரின் சாதனைகள் பிரமிக்க வைக்கின்றன, எனக்கு sight இல்லாமல் இருக்கலாம். அதற்காக நான் வருத்தப்படவில்லை, உட்கார்ந்து அழுது கொண்டிருக்கவில்லை. எனக்கு இருக்கும் vision-ல் இந்த உலகத்தை வியப்படைய வைக்கிறேன் என்று வியப்படைய வைத்திருக்கின்றார் இளங்கோ.  மிகச் சிறந்த தன்னம்பிக்கை அளிக்கும் புத்தகம் . வாங்கிப் படிக்கலாம், படிக்கும் மாணவர்களுக்குப் பரிசாக அளிக்கலாம். இந்தப் புத்தகத்தைப் பற்றிப் பேசச்சொன்னால், 144 பக்கம் உள்ள இந்தப் புத்தகம் பற்றி ஒரு மணி நேரம் பேச நான் ரெடி. ...

No comments: