Tuesday 14 October 2014

அண்மையில் படித்த புத்தகம் : கப்பலில் வந்த நகரம்-ம. காமுத்துரை

அண்மையில் படித்த புத்தகம் : கப்பலில் வந்த நகரம்-சிறுகதைத் தொகுதி
ஆசிரியர்                                         : ம. காமுத்துரை
பதிப்பகம்                                        :  சந்தியா பதிப்பகம், சென்னை
முதல்பதிப்பு                                  :  2006                    பக்கம் :128                  விலை:ரூ 60
மதுரை மைய நூலக எண்                                                    : 168518

                                                    ம.காமுத்துரை அவர்கள் எழுதிய 14 சிறுகதைகளின் தொகுப்பு இந்த நூல் . முன்னுரையை 'ஒரு கடிதம் ' என்னும் தலைப்பில்  10 பக்கங்களுக்கு எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் கொடுத்திருக்கின்றார். முன் நடத்தும் தடங்கள் என இக்கதைகளை நோக்கும் பா.செயப்பிரகாசம் " எந்தப் பேனாவுக்கும் கொஞ்சமும் உயரம் குறையாத எழுத்தைக் கைவசம் கொண்ட காமுத்துரை" என்று குறிப்பிடுகின்றார்.

                            புதுச்சேரிக்கு போன அனுபவத்தையும் எல்லோரையும் போல பாட்டிலுக்கு பெயர் போன புதுச்சேரியை நினைத்துக்கொண்டிருக்கும் வேளையில் புத்தகத்திற்கும், படைப்பாளிகளுக்கும் பெயர் போனதும் புதுச்சேரி என்பதனை ஞாபகப்படுத்தும் விதமாக- முடிவைக் கொண்டு ' கப்பலில் வந்த நகரம் ' சிறுகதை அமைந்திருக்கிறது. மாட்டுத்தரகர்களிடம் மாட்டிக்கொண்ட ஆட்டோக்காரரான சுப்புராசு படும் பாட்டை நையாண்டி கலந்த கதைச்சொல்லலில் சொல்லும் 'கிடரி', பழைய துணி தைத்தற்காக கொடுத்த ஒத்த ரூபாயை வேண்டாம் என்று சொல்லிவிட்டு, வீட்டின் நிலமையில் அந்த ஒத்த ரூபாயைக் கேட்பதற்கு போகும் வழியில் மனதில் ஏற்படும் எண்ணங்களை வடித்துக்கொட்டியிருக்கும் 'ஒரு ரூபாய் ' எனப் பல கதைகள் நெஞ்சைத் தொடுகின்றன.

                           சைக்கிளை வாடகைக்கு எடுத்துவிட்டு டிமிக்கி கொடுக்கும் பெயிண்டரைப் பற்றிய கதையான 'வருகை'  ஒரு காலத்தில் வேலை நிறுத்தம் செய்ததற்காக தன்னை வேலையை விட்டு நீக்கிய முதலாளியே இன்று அவரது மில்லிலேயே காண்டிராக்ட்காரராக மாறிப்போன கதை சொல்லும் 'சேர்மானம்' லாட்டரிச்சீட்டு பைத்தியமான பண்ணையார் எப்படி ஏழைக்கு பரிசு கிடைக்கக்கூடாது என்னும் மனநிலையில் இருக்கிறார் என்பதையும், கிழித்துப்போட்டு மறுபடியும் குப்பையிலிருந்து எடுத்துப்போய் பரிசுப்பணத்தை வாங்க எண்ணும் பணக்காரக் குப்பைத்தனத்தை சொல்லும் 'பண்ணை வீடு ' , சாண்டக்ஸ் செருப்பு வாங்க தேனியில் கடைக்கு நடந்துசென்று மாசமாயிருக்கும் தன் மகளுக்கு கறிக்கஞ்சி ஊத்தவேண்டும், மாடு மேய்க்கப்போகும் மகனுக்கு ஒரு செருப்பு வாங்கித்த்ரவேண்டும் என நினைப்பு வர 'பிறகு வந்து எடுத்துக்கிறேன் ' என்று சொல்லி செருப்புக்கடையை விட்டு வெளியே வரும் அவனைப் பற்றிச்சொல்லும் 'சாண்டக்ஸ் ' என்னும் கதைகள் வாழ்க்கையின் சாதாரணமானவர்கள் ப்டும் அவலங்களை கண் முன் நிறுத்துகின்றன.

                           ஆனால் இந்தத் தொகுப்பில் உள்ள சிறுகதை ஒன்று படித்து முடித்தவுடன் கண்களில் கண்ணீர் வரவைத்தது. படித்து முடித்த பின்பு கொஞ்ச நேரம் மவுனமாய் இழவு வீட்டில் உட்கார்ந்திருப்பதைப் போல உட்காரவைத்தது. தெருக்கள் தோறும் சின்னச்சின்ன கடைகளாய் வாழ்வாதார தூண்களாய் பல பேர் வாழ்ந்த நிலை போய் , பகுதிக்கு ஒன்றாய் வந்து உட்கார்ந்திருக்கும் சூப்பர் மார்க்கெட்டுகளைப் பற்றி யோசிக்க வைத்தது. அந்தக் கதை காற்றில் நிறைந்த கவிதை.

                        கடன் தொல்லை தாங்காமல் கணவன் ஓடிப்போக, மூன்று பெண்  பிள்ளைகளை வைத்துக்கொண்டு , கடின் உழைப்பு இருந்தாலும் அவதிப்படும் தமிழ்ச்செல்வி. விகடனில் வந்த கதையைப் படித்து ' கதையிலே மொழி அற்புதமாச்செஞ்சிருக்கீங்க ' என்று பாராட்டிய தமிழ்ச்செல்வி, டெலிபோன் பூத்தில் வேலை செய்து அப்பளம் மோதிர அப்பளம் செய்து கடன் இல்லாமல்; பிள்ளைகளை வளர்க்க கஷ்டப்படும் தமிழ்ச்செல்வி, வாடகை குறைவு என்று ஊருக்குத் தள்ளி குடியிருக்கும் தமிழ்ச்செல்வி , க்டைசியில் கடனை அடைக்க வழியில்லாமல் தனது பிள்ளைகளான முத்துச்செல்வி, அன்புச்செல்வி,அறிவுச்செல்வியோடு  குடிசைக்கு தீ வைத்து மொத்தமாய் குடும்பத்தோடு கருகிக் போகும் தமிழ்ச்செல்வி என அந்தப் பாத்திரம் நினைவுகளில் வாழும் வண்ணம்  உலவவிட்டிருக்கின்றார், க்டைசியில்
" கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லையாம் !
  இணைத்துக்கொள்ளுங்கள்...
கடனை அடைக்கும் சக்தியுமில்லை " என்று தமிழ்ச்செல்வியின் கவிதையோடு கூடிய கடிதம் கையில் கிடைத்திருப்பதாக முடித்திருக்கின்றார்.

                                 ஒரு பக்கம் குடிகாரனாக,கடன்காரனாக  கணவன். வாழ்வுக்கான போராட்டங்களை , வயிற்றுப்பிழைப்புக்கான போராட்டங்களை நடத்திக்கொண்டு நித்தம் நித்தம் செத்து செத்துப் பிழைக்கும் தமிழ்ச்செல்விகள் எத்தனை ? பன்னாட்டு மூலதனம் - இருகை கூப்பி வரவேற்பு. உள் நாட்டு , வெளி நாட்டு முதாலாளிகளின் பகாசுரக் கம்பெனிகள் அழித்தொழிக்கும் சிறு கடைகள் எத்தனை ? எத்தனை ? அவர்களின் வாழ்வாதாரங்களை அழித்து, ஒழித்து என்ன வசந்த காலத்தை கொண்டு வந்து விடப்போகின்றார்கள் இந்த வெங்காயங்கள் ஏழைகள் வாழ்வில் ? குமுறல்களை கொட்ட தூண்டுகோலாய்  அமையும்  கதையாய் இந்த 'காற்றில் நிறைந்த கவிதை ' என்னும்  கதை .

                         இந்தத் தொகுப்பில் ஒட்டாத கதையாக ' களவாடிய இரவு ' என்னும் கதை இருக்கிறது. மற்ற கதைகளில் இருக்கும் தெளிவும் , புரிதலும் இக்கதையில் இல்லை. பின் நவீனத்துக கதை எழுத முயற்சி செய்தது போல் இருக்கிறது. நமக்கு அது தேவையில்லை.

                            தேனியைச்சார்ந்தவர் இந்த எழுத்தாளர் ம.காமுத்துரை என்று தெரிகின்றது. இவரின் கதைகளை இத்தனை நாட்களும் வாசிக்காமல் எப்படி இருந்தேன் என்று தெரியவில்லை.  " அறியப்படாதவர்களின் வரிசையில்தானே நாம் இன்னும் நிற்கிறோம். " என்று பா.செயப்பிரகாசம் முன்னுரையில் குறிப்பிடுவது உண்மைதான். ஆனால் ம.காமுத்துரை போன்ற சிறுகதை எழுத்தாளர்கள் கட்டாயம் அறியப்படவேண்டும். அறியப்படுத்தப்படவேண்டும்.                                                   

6 comments:

venu's pathivukal said...

சிறுகதைகளை வாசித்த அனுபவத்தைச் செறிவாகவும், சுவையாகவும் அடையாளப்படுத்தும் உங்கள் நூல் அறிமுகம் சிறப்பாக இருக்கிறது...வாழ்த்துக்கள்...

எஸ் வி வேணுகோபாலன்
14 10 2014

முனைவர். வா.நேரு said...

நன்றி தோழரே, உடனடி வாசிப்பிற்கும், கருத்திற்கும்,

KARUPPIAH S said...

நமக்கு அறிமுகமில்லாத பல படைப்பாளிகள் , சிந்தனையாளர்கள், சமூக நலம் விரும்பிகள் நம்மிடையே சாதாரண மனிதர்களாக வலம் வருகிறார்கள். சரியான வாய்ப்பு கிடைக்கும் போதே அவர்களைப் பற்றி அறிய நேரிடும். தோழர் நேருவை, நண்பர் வேணுகோபாலன் அடையாளம் கண்டு கொண்டது போல். எவரெல்லாம் தன்முனைப்பை தூக்கி எறிந்து, அன்பைச் சுமந்துகொண்டு நேசக்கரம் நீட்டுகிறார்களோ அவர்களது நட்பு எல்லை விரிகிறது என்பதே உண்மை.

KARUPPIAH S said...

என்னுடைய கருத்திற்கு மதிப்பளித்து , படைப்புகளின் மீதான விமர்சனத்தைக் கூறுவதற்கு இருந்த தடையை நீக்கி நேரிடையாக பதிவு பெறுமாறு அனுமதித்து உள்ளீர்கள். நீங்கள் நேர்மறை எண்ணங்களுக்கு சொந்தக்காரன் என்பதை நிருபித்து விட்டீர்கள். நன்றி.

முனைவர். வா.நேரு said...

அண்ணே , நன்றி ! தங்கள் நேர்மறையான, தொடர் ஊக்கமூட்டும் கருத்துக்களுக்கு

முனைவர். வா.நேரு said...

நன்றி !,நன்றி . ஒளிப்பதற்கு ஒன்றும் இல்லை, அதனால் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை.