Wednesday 20 January 2016

அண்மையில் படித்த புத்தகம் : ஒளிச்சிறை

அண்மையில் படித்த புத்தகம் : ஒளிச்சிறை(கவிதைத்தொகுப்பு )
ஆசிரியர்                                    : இரா.தமிழரசி
வெளியீட்                                   : ஆர்த்தி வெளியீடு ,6A, மூவேந்தர் நகர்,               விழுப்புரம்-605602 செல் : 9842660895

முதற்பதிப்பு                               :  அக்-2006, 80 பக்கங்கள், விலை ரூ 40
மதுரை மைய நூலக எண்        : 174459

                                            கிடைக்கும் கவிதை நூல்கள் எல்லாம் ஈர்ப்பாக இருப்பதில்லை, எனினும் கவிதை நூல் நன்றாக அமைந்துவிட்டால் அதனின் வாசிப்பு இனிமை கட்டுரைகளிலோ , கதைகளிலோ அமைவதில்லை. இந்த நூலின் ஆசிரியர் இரா.தமிழரசி கல்லூரி பேராசிரியர், ஆய்வு நூல் அளித்தவர் என்னும் குறிப்புகள் உள்ளன இந்தப்புத்தகத்தில். படிமமும், உருவகமும், உணர்வும் ஒன்றிணைந்த கவிதைகளை இயற்றுபவர் என்பதே  நான் கூறும் குறிப்பாக அமையும்.

                                  80 பக்க நூலில் 53 கவிதைகள் உள்ளன. சிறிய நூல். பாட்டியை மறுபடி வருவாயா எனக்கேட்கும்
( பேச ஆளில்லாமல் கழியும்
இன்றைய பகல்களில்
நீள்கின்றன காதுகள்
உனது வார்த்தைகளுக்காக )
எதார்த்தமான கேள்வியாக அமையும் முதல் கவிதை முதல் பெயரற்ற நம் உறவை காப்பாற்ற எதற்கு குறியீடுகள் என்னும் கடைசிக் கவிதை வரை எதுவுமே கற்பனைக் கவிதைகளாக இல்லை, நடப்பு வாழ்வின் கேள்விகளையும் பதில்களையும் உண்மை சாட்சியாக உணர வைக்கும் கவிதைகளாக இருக்கின்றன.

நீச்சலைப் பற்றிச்சொல்லும் 'நீரும் நானும்', கலைத்தல் கலைதலில் கூட இருக்கும் கலை நயம் சொல்லும் 'கலைத்தல்', கிராமத்தை விழுங்கிக் கொழிக்கும் நகரத்தையும்,  கிராமத்தையும் ஒப்பிடும் 'ஒப்புதல் வாக்குமூலம்', பெண்களின்  உலகத்தை குருவிகளோடு ஒப்பிட்டு ' கோபமின்றிக்  குழைவோடு பரிமாறிக்கொள்ள எண்ணற்ற வார்த்தைகள் இருக்கத்தான் செய்கின்றன குருவிகளின் உலகத்தில் '  எனும் ஏக்கத்தை வெளிப்படுத்தும் 'குருவிகளின் உலகம் ' எனப் பல கவிதைகள் தன் அனுபவம் சார்ந்தும், இயற்கை நிகழ்வுகள் சார்ந்தும் அமைந்திருக்கின்றன.

                  'தோழா, தோழா' என்னும் திரைப்படப்பாடலை நினைவுபடுத்தும் ' நெஞ்சம் மறப்பதில்லை', 'இருப்பினும் இருக்க நேர்கிறது ' என்பதைச்சொல்லும் 'கிளிப்பிள்ளையாய் ' ' எல்லா நூல்களுக்குமா கிடைக்கின்றன ....? ' எனச்சொல்லும் புத்தக அலமாரி, 'புத்தகப் பொதியேற்றி ' எப்படி நாம் மழலைகளை மாடுகளாய் மாற்றுகிறோம் என்பதனைச்சொல்லும் 'கை தேர்ந்த குயவனாய் ' எனப் பல கவிதைகளை சுட்டிக் காட்ட இயலும் நல்ல கவிதைகளாய்.

பெண்ணியம் எனச்சொல்லாமல் ஆனால் ஆழமான சில கேள்விகளை இக்கவிஞர் இந்தத் தொகுப்பில் எழுப்புகிறார். சதுரங்க ஆட்டத்தைப் பற்றி வரிசையாக சொல்லிவிட்டு க்டைசியில் அரசியையும் அரசனையும் ஒப்பிட்டு
" அரசிக்காக அழுவதில்லை அரசாங்கம்
   எச்சரிக்கைகளை மீறிக் காக்க வழியின்றி
   மாளும் அரசனோடு
   முடிந்துவிடும் ஆட்டம்
    சதுரங்கத்திலும் கூட "  சொல்லும் வரிகள் அருமை. அத்தனையிலும் ஆணுக்குத்தானே முன்னுரிமை இந்த உலகத்தில் என்பதனை கவித்துவத்தோடு சொல்லியிருக்கிறார். கைதட்டலாம்.
              வேலைக்குப் போவதில் இருக்கும் இடர்பாடுகளை வரிசையாக சொல்லும் 'புறப்பாடுகள்',
" அகிலத்தை
   ஆணின் விழியால் மட்டுமே
    பார்த்துப்பழகிய எங்களின்
    பகிர்ந்து கொள்ளப்படாத
     பகல்கள் ' எனச்சொல்லும் 'பெண்மை நலம் பெருக ' என்னும் கவிதைகளோடு பல கவிதைகள் , தன்னையொத்த பெண்களின் நிலையை பகிர்ந்து கொள்ளும் கவிதைகளாக இருக்கின்றன.

'பறத்தலின் சுகமறியாமல்
 ஒட்டிக்கொண்டிருந்தன
 இறகுகள்
 விழுந்தன உதயக்கதிர்கள்
  நினைவுக்குகைக்குள்
  இருளைத்தின்று பிரகாசமாக்கியது
  இருப்பிடம் முழுவதையும் '
எனத் தலைப்புக் கவிதையாக அமைந்த 'ஒளிச்சிறை ' கவிதை  மீளவியலாமல் கலங்கி நிற்பதை நிழற்படமென வார்த்தைகளால் வடித்தெடுக்கிறது.

படித்து முடித்தவுடன் ஒரு நல்ல கவிதைத் தொகுப்பை படித்தோம் என்னும் மன நிறைவைத் தந்த தொகுப்பு. வாழ்த்துக்கள் இந்தத் தொகுப்பை வெளியிட்ட பதிப்பகத்திற்கும், கவிஞர் இரா.தமிழரசி அவர்களுக்கும்.




                                 

No comments: