Saturday 4 June 2016

மீனென கிணற்றுக்குள்........

                                       
                                            கடந்துபோன காலங்கள்(4) .....



எத்தனை கிணறுகள்
ஊரைச்சுற்றி !
மீனென கிணற்றுக்குள்
மூழ்கிக் கிடந்த காலங்கள் !
மூச்சடக்கி கிணற்றுக்குள்
கண்ணாமூச்சியாய்
வந்து பிடித்துப்பார்
என வளைந்து வளைந்து
நண்பர்களுக்கு
போக்குக் காட்டிய காலங்கள் !

பத்துவயதுவரை
கிணற்றுக்குள் நீந்தும்போது
உடம்பில் எதுவும் துணி
போட்டுக்கொண்டு
குளித்ததில்லை
ஜட்டியெல்லாம் கிராமத்துக்குள்
அப்போது அறிமுகமில்லை
இன்றைக்குப் போல்
அன்றைக்கு அது
விரசமாக
ஊருக்கோ எங்களுக்கோ
உறுத்தியதில்லை....

கிணற்றுக்குள் குளிக்க
கழட்டி வைத்த துணியை
மேலேறிய
சுப்பிரமணி தூக்கிக்கொண்டு
ஓடிவிட
கொஞ்சதூரம் ஓடி
அவனிடம் துணியை
கெஞ்சி வாங்கி......
மறுநாள் கிணற்றில்
குளிக்க வந்த அவனை
கிணற்றுக்குள்
முக்கி முக்கி எடுக்க....
மூச்சுத்திணறி
சிக்கித் தவித்த அவன்
மேலே ஏறி ஓடிப்போய்
'அம்மா என்னைக்
கொல்லப்பார்த்தான் ' என
அவன் அம்மாவை அழைத்துவந்து
என் அம்மாவிடம் புகார்சொல்லி
முதுகு வீங்கியதெல்லாம்
தனிக்கதை....

காட்டுவா ராவுத்தர் கிணற்றின்
மேல் நின்று
பல்டி அடித்து கிணற்றுக்குள்
குதித்து எழுந்த நாட்கள் !


பாண்டியன் கிணற்றில்
நாங்கள்
ஒரு பக்கம் நீந்த
தண்ணீர்ப்பாம்பு
கிணற்றுக்குள்
இன்னொரு பக்கம் நீந்த....
மறைந்துவிட்ட அன்புஇளவல்
ஹெல்த் இன்ஸ்பெக்டர்
கருவாடு முருகேசன்
பாம்போடு பாம்பாய்
நீந்தி நீந்தி
கடைசியில் பாம்பைக்
கையில் பிடித்து
கிணற்றுப் படியில் ஏற
பயந்து போன எனது
வெளியூர் நண்பன்
பாதிக் குளியலில்
தலையைத் துவட்டிய
நாட்கள்
நகைப்போடு நகரும் நினைவுகள்...

எட்ட நின்று
தங்களுக்கும் உரிய
கிணற்றை
வேடிக்கை பார்க்கிறார்கள்
என் பிள்ளைகள்.....
துக்கமாகத்தான் இருக்கிறது

அவர்கள் வாழ்வின்
ஒரு அங்கமாய் நீச்சல்
இல்லை என்பது மட்டுமல்ல
நீச்சலடிக்கும் நிலையில்
பெரும்பாலான கிணறுகளில்
தண்ணீர்
இல்லை என்பதும்...
ஊரும் உறவுகளும்கூட
தூரமாகிப்போனது
என்பதும்தான்.....

                                       வா. நேரு, 05.06.16


                            

No comments: