Tuesday 15 November 2016

வாஸ்துவும் முதலமைச்சரும்.......இவர்கள்தான் நம்மை ஆளும் மன்னர்கள்!!!!!!



வாஸ்து சாஸ்திரப்படி அமையாததால், அது இந்தியாவின் புதிய மாநிலமான தெலங்கானாவின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் என்று கூறி, தலைமைச் செயலக கட்டடத்தை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்ட முதலமைச்சர் கே. சந்திரசேகர ராவ் முடிவெடுத்துள்ளார்.

ஹைதராபாத்தில் ஹூசைன் சாகர் ஏரியில் அமைந்துள்ள சைஃபாபாத் அரண்மனையின் கட்டடப் பணிகளைப் பார்வையிட, ஹைதராபாத்தின் 6-வது நிஜாம் மெஹபூப் அலி பாஷா, 1888-ம் ஆண்டில் அங்கு நேரடியாக வந்தார்.
நிஜாம் அந்த அரண்மனைக்கு வந்து குடியேறுவதை விரும்பாத இரண்டு முக்கிய பிரமுகர்கள், அவர் வரும்போது உடும்பு குறுக்கே செல்லுமாறு ஏற்பாடு செய்தார்கள். அதன்படி தனது வழியில் உடும்பு குறுக்கிடுவதைக் கண்ட நிஜாம், சைஃபாபாத் அரண்மனையை இழுத்துப்பூட்டுமாறு உத்தரவிட்டார். பல ஆண்டுகளுக்குப் பிறகு, ஹைதராபாத் பேரரசின் நிர்வாக அலுவலகமாக அந்த அரண்மனையை திவான் பயன்படுத்தினார்.
சைஃபாபாத் அரண்மனை, தற்போதைய தலைமைச் செயலக வளாகத்தில், இன்றும் பாரம்பரிய சின்னமாக நிற்கிறது. அதில், தெலங்கானா, ஆந்திரா ஆகிய இரு மாநில அரசு அலுவலகங்களும் உள்ளன.

ஆனால், தெலங்கானாவின் வளர்ச்சிக்கு தலைமைச் செயலக கட்டடம் தடையாக இருக்கும் என்று கூறி, அந்தக் கட்டடத்தை முழுமையாக இடித்துவிட்டு, புதிய வளாகம் கட்ட முதலமைச்சர் திட்டமிட்டுள்ளார்.
வாஸ்து நம்பிக்கை காரணமாக, சந்திரசேகர ராவ் தனது அலுவலகத்துக்கே வருவதில்லை. அமைச்சரவைக் கூட்டத்துக்குத் தலைமை வகிப்பதற்காக மாதத்தில் ஒன்று அல்லது இரு முறை மட்டும் வருகிறார். தலைமைச் செயலக கட்டடத்தின் வாஸ்து, தெலங்கானாவுக்கு சாதகமாக இல்லை என அவர் நம்புகிறார். வாஸ்து என்பது, கட்டடக் கலையின் அறிவியலாக புராதன காலத்தில் இருந்து பார்க்கப்படுகிறது. ஆனால் இது மூடநம்பிக்கை என விமர்சகர்கள் கண்டிக்கிறார்கள்.
கே சந்திரசேகர ராவ்Image copyrightAFP
Image caption
வாஸ்து சாஸ்திரப்படி இல்லாதது மாநிலத்துக்கு நல்லதில்லை என்கிறார் கேசிஆர்
அந்தக் கட்டடம் பழுதடைந்து, பயன்படுத்த முடியாத மோசமான நிலையில் இருந்தால் அதிக சர்ச்சை ஏற்பட்டிருக்காது. ஆனால், அக் கட்டடத்தின் பெரும்பகுதி புதிதாக கட்டப்பட்டவை. பத்து ஆண்டுகளுக்கும் குறைவானவை.
``நல்ல நிர்வாகம் நடத்துவதில் கவனம் செலுத்தாமல், அரசு கட்டடங்களைக் கட்டுவதில்தான் அக்கறை காட்டுகிறோம். தற்போதுள்ள கட்டடத்தின் தன்மை, வசதியைப் பற்றி ஆராயாமல் அலங்கார காரணங்களுக்காக அந்தக் கட்டடம் இடிக்கப்பட உள்ளது'' என்றார் அரசியல் ஆய்வாளர் கே. நாகேஸ்வர்.
ஆனால், வாஸ்து சரியில்லாத காரணத்தால்தான் நிஜாம் முதல், ஒன்றுபட்ட ஆந்திராவின் முதல்வராக இருந்த கிரண்குமார் ரெட்டி வரை வெற்றிகரமாக ஆட்சி செய்ய முடியவில்லை என்று முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவ் கூறுகிறார்.
பசுமை தலைமைச் செயலகம் கட்டும் முடிவு குறித்து சந்திரசேகர ராவிடம் கேட்டபோது, ``கண்டிப்பாக மோசமான வாஸ்துதான். வரலாறுதான் அதற்கு உதாரணம். ஆட்சியில் இருந்த யாரும் செழிக்க முடியவில்லை. தெலங்கானாவுக்கும் அந்த கதி ஏற்பட்டுவிடக்கூடாது'' என்றார் அவர்.
ஆனால், தனது தனிப்பட்ட நம்பிக்கைகளுக்காக மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. அனைவருக்கும் பொதுவான வாஸ்து என ஒன்றில்லை. அது ஒவ்வொரு நபருக்கும் வேறுபடும் என்று அவர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து, தெலங்கானா சட்டமேலவை எதிர்க் கட்சித் தலைவர் ஷபிர் அலி கூறும்போது, 2019-ஆம் ஆண்டு புதிய முதலமைச்சர் பதவிக்கு வந்து, வாஸ்து தனக்கு பொருத்தமாக இல்லை என்று கூறி மீண்டும் மக்களின் வரிப்பணத்தை வீணடிக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பினார்.
சைஃபாபாத் அரண்மனைImage copyrightTS SUDHIR
Image caption
19-ஆம் நூற்றாண்டு சைஃபாபாத் அரண்மனை அதிர்ஷ்டமில்லாதது என ஆட்சியாளர்களால் நம்பப்படுகிறது.
ஆனால், இதையெல்லாமல் காதில் போட்டுக் கொள்ள முதலமைச்சர் கேசிஆர் தயாராக இல்லை. ஆளுநரைச் சந்தித்து, தனது பங்கில் வைத்துள்ள கட்டடடத்தை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு காலி செய்து தங்களிடம் ஒப்படைக்குமாறு தர அறிவுறுத்துமாறு கேட்டுக் கொண்டார்.
இந்த ஆண்டு இறுதியில் அந்தக் கட்டடத்தை தரைமட்டமாக்கிவிட்டு, ஹஃபீஸ் என்ற ஒப்பந்ததார் கொடுத்த திட்டப்படி புதிய கட்டடம் கட்ட கேசிஆர் திட்டமிட்டுள்ளார். அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாவிட்டாலும், புதிய கட்டடம் கட்ட ரூ.350 கோடி முதல் ரூ.500 கோடி வரை ஆகலாம் என மதிப்பிடப்படுகிறது. ஆனால், எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் 1200 கோடி ரூபாய் என மதிப்பிட்டுள்ளது.
அலுவலகம் மட்டுமல்ல, அவரது வீடு மற்றும் முகாம் அலுவலகத்துக்கும் வாஸ்து சரியில்லை என கேசிஆர் நம்புகிறார். அந்தக் கட்டடம், ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி, முதலமைச்சராக இருந்தபோது, 2005-ஆம் ஆண்டு கட்டப்பட்டது, வாஸ்து நிபுணர்களின் ஆலோசனையுடன் கட்டப்பட்டது. அவர், 2009-ல் ஹெலிகாப்டர் விபத்தில் காலமானார். அவரையடுத்து, கே. ரோசையா முதல்வரானார். வாஸ்து நிபுணர்களின் ஆலோசனைப்படி, அந்தக் கட்டடத்தில் மாற்றங்கள் செய்தார். ஆனால், ஒரே ஆண்டில் அதிகாரம் பறிபோனது. அவரையடுத்து வந்த கிரண்குமார் ரெட்டி, வாஸ்து சாஸ்திரத்தில் நம்பிக்கை இல்லாதவர். எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. தனது பதவிக்காலம் முழுவதும் ஆட்சியில் இருந்தார்.
கேசிஆருக்கு தற்போது 40 கோடி ரூபாயில் புதிய வீடு மற்றும் முகாம் அலுவலகம் இணைந்த கட்டடம் தயாராகி வருகிறது. நவம்பர் இறுதியில் அவர் அதில் குடியேற இருக்கிறார்.
``ஹைதராபாத்தின் புகழ்பெற்ற சார்மினார் கோபுரம், தெலங்கானாவுக்கு சரியான வாஸ்து இல்லை என கேசிஆர் முடிவெடுக்காமல் இருந்தால் நல்லது'' என நகைச்சுவையாகக் குறிப்பிட்டிருக்கிறார் ஷபிர் அலி.

நன்றி : பி.பி.சி. தமிழ் -15.11.2016

          

2 comments:

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை said...

இவர்களே சரியில்லை என்று மக்கள் “இடிக்காதவரை” இவர்களின் வாஸ்துகள் மக்களுக்கு வாதைகள் தான்! (ஆமாம், வாசல் சரியில்லை என்று கொல்லைப்புறமாக வருவார்களாமா? அல்லது கழிவறை சரியில்லை என்று ...சரி வேண்டாம்)
அருமையான பதிவு தோழர், தொடருங்கள். நன்றி

முனைவர். வா.நேரு said...

நன்றி தோழர், வருகைக்கும் கருத்திற்கும்.உங்களுக்கு இருக்கும் தொடர்ச்சியான வேலைகளுக்கு மத்தியில்,தோழர்,தோழியர்களின் வலைத்தளங்களைப் பார்ப்பது, படிப்பது ,ஊக்கம் அளிப்பது என்பதனைத் தொடர்ந்து செய்யும் தங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளும் வணக்கங்களும்.