Thursday 2 February 2017

சாதி முறையைத் தகர்க்க இயலுமா ?....

அண்மையில் படித்த புத்தகம்: சாதி முறையைத் தகர்க்க இயலுமா ?
ஆசிரியர்                          : டி.ஞானையா
வெளியீடு                        : விழிகள் பதிப்பகம், சென்னை-41
முதல் பதிப்பு                 : 2012 , 200 பக்கங்கள், விலை ரூ 150.

அண்மையில் ஒரு புத்தக்கத்தை வாங்குவதற்குமுன் அதன் அணிந்துரையைப் பார்த்தேன். திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஏறத்தாழ 14 பக்கங்கள் அந்தப் புத்தகத்திற்கு அணிந்துரை வழங்கியிருந்தார்கள். ஆசிரியர் அவர்களின் அணிந்துரை இத்தனை பக்கங்கள் அமைந்த புத்தகம் வேறு ஏதும் நான் பார்த்ததாக எனக்கு ஞாபகம் இல்லை. அந்தப் புத்தகத்தை வாங்கிப் படித்தபின்புதான் அந்தப் புத்தகத்தின் முக்கியத்துவமும் ஆய்வும் எனக்குப் புரிந்தது, அந்தப் புத்தகத்தின் தலைப்பு "சாதி முறையைத் தகர்க்க இயலுமா ? " என்னும் புத்தகம் . அதன் ஆசிரியர் டி.ஞானையா.  அகில இந்திய அளவில் மிகப்பெரிய தொழிற்சங்கப்பொறுப்பில் இருந்தவர்.  இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம், அனைத்துப் பகுதிகளுக்கும் தொழிற்சங்கப்பணிகளுக்காக சென்று பணியாற்றியவர்.

                                                     எவர் படித்தாலும், ஏன் பார்ப்பனரே படித்தாலும் இந்தச்சாதி முறை என்பது எவ்வளவு கொடுமையானது, எப்படி இந்தச்சாதி முறை உருவாக்கப்பட்டது, எப்படி இந்தச்சாதி முறை நிலை நிறுத்தப்பட்டது, இன்றைக்கும் கூட அது ஏன் இன்னும் உயிரோடு இருக்கிறது, சாதி இன்னும் உயிரோடு இருப்பதற்கு என்ன காரணம், எப்படிப்பட்ட மன நிலை பார்ப்பனர்களால் உருவாக்கப்பட்டது, அது ஏன் இன்னும் அனைத்து மக்களிடமும் படிந்து இருக்கின்றது  என்பதனை உணர்ந்து கொள்ளும் வகையில் இந்தப்புத்தகம் அமைந்துள்ளது.

                                           இந்தபுத்தகத்தில் மொத்தம் 11 இயல்கள் உள்ளன. முதல் இயலான 'வர்ண தர்மாவின் இறை இயலும் சட்டமும் ' என்னும் பகுதி வட இந்தியாவை பார்ப்பனியம் எப்படி ஆட்கொண்டது என்பதனை விவரிக்கின்றது.தங்கள் இனத்தின் நலத்திற்க்காக எப்படிப் பார்ப்பனர்கள் மன்னர்களைப் பயன்படுத்தினார்கள் , சூத்திரருக்கான தண்டனையை எப்படிப் பார்ப்பனர்கள் மன்னர் ஆட்சிகளில் நிறைவேற்றினார்கள், மனுவின் கால எல்லை பொன்றவற்றை மிகப்புகழ் அடைந்த வரலாற்று ஆசிரியர்கள் டாக்டர் கொசம்பி, ரோமிலா தார்பர், ஆர்.எஸ்.சர்மா, சுவிரா ஜெஸ்ஸ்வால் போன்றவர்களின் ஆய்வுகளை மேற்கோள் காட்டி இந்த் நூலின் ஆசிரியர் நிறுவுகின்றார். இராமனும் , கிருஷ்ணனும் எப்படிக் கடவளாக்கப்பட்டனர், அவர்களின் உண்மையான பாத்திரப்படைப்பு என்ன என்பதனை அண்ணல் அம்பேத்கரின் வார்த்தைகள் கொண்டு விளக்குகின்றார்.

                                                          வட நாட்டை ஆக்கிரமித்த பார்ப்பனர்கள் எப்படி தெற்கு நோக்கி நகர்ந்தார்கள்,  நிலை  கொண்டார்கள் என்பதனை 'தெற்கு நோக்கிப் படர்ந்த பிராமணியம் ' என்னும் இயல் விளக்குகிறது.  .  இஸ்லாமியர்களின் படையெடுப்பும், ஆட்சியும்  எவ்வாறு சூத்திரர்களின் எழுச்சிக்கும் வளர்ச்சிக்கும்  பயன்பட்டது வட இந்தியாவில் என்பதனை மூன்றாவது இயலும், பார்ப்பனர்கள் இந்து மதம் ஒரு சகிப்புத்தன்மை உள்ள மதம் என்பதுபோல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தினாலும், அன்று முதல் இன்று வரை சாதி அடிப்படையிலான சமூக ஏற்றத்தாழ்வு, பார்ப்பனர்களின் தலைமை என்பதுதான் இந்து மதத்தின் அடிப்படை என்பதனை ' சாதியத்தைக் கைவிடாத நவீன இந்து மதம் ' என்னும் இயலும் விவரிக்கன்றன.

                                            சமூக நீதித் தத்துவத்தின் முன்னோடிகளான ' ஜோதிராவ் புலே, தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், சிங்கார வேலர்  போன்றவர்களைப் பற்றிய விரிவான தகவல்களையும், போராட்டத்தையும் தன்னுடைய நோக்கில் மிகச்சிறப்பாகவே இந்த நூலாசிரியர் விவரித்துள்ளார். தமிழ்த்தேசத்தில் பகுத்தறிவுவாதம என்னும் பிரிவில் தமிழருக்கும் பார்ப்பனர்களுக்குமான வேற்றுமை, திருக்குறளுக்கும் கீதைக்கும் உள்ள வேற்றுமை போன்றவற்றை விவரித்துள்ளார்.  'திருப்பித் தாக்குதல் ' என்னும் வழிமுறை எப்படி ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படுத்தியது என்பதையும், அமெரிக்காவில் கறுப்பர்கள் இருந்த நிலையும் இன்று அவர்கள் அடைந்த மாற்றமும், ஏன் இந்தியாவில் ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்க்கையில் மாற்றம் வரவில்லை என்பதனையும் ஒப்பீட்டு அளவில் விளக்குகின்றார்.

                               இந்தியாவில் வர்க்கம் என்ற பார்வையால், கம்யூனிஸ்டுகள் அம்பேத்கருக்கும் , பெரியாருக்கும் எதிராக நின்ற கொடுமையை விமர்சிக்கின்றார்.  சொந்த சாதியிலேயே திருமணம் முடிக்கும் அகமண முறை சட்டப்படி குற்றம் என ஆக்கப்படவேண்டும் என்பதனை வலியுறுத்தும் அவர், இந்தியாவில் மாபெரும் கலாச்சார புரட்சி ஏற்பட 11 திட்டங்கள் என்று தன் திட்டங்களை முன்வைக்கின்றார்.

                         ஒரு பொதுவுடமை இயக்கத்தோழரிடமிருந்து வந்துள்ள , நல்ல புரிதல் உள்ள, சாதி முறையைத் தகர்ப்பதற்கான திட்டம் உள்ள ஒரு புத்தகம். பல்வேறு ஆதாரங்கள் அணிவகுக்கின்றன .மாறும் என்ற வார்த்தையைத் தவிர மற்றவை எல்லாம் மாறும் என்றார் மார்க்ஸ். ஆம், ஒரு காலத்தில் மாறாது என்று நினைத்தவை எல்லாம் மாறியிருக்கிறது, சமூகத்தில் அழியாது என்று நினைத்தவை எல்லாம் அழிந்திருக்கிறது நமது முன்னோடிகள் உழைப்பால். பார்ப்பன சக்திகள் திட்டமிட்டு, சுய சாதி பெருமை பேசுவதை ஒரு திட்டமாக வைத்திருக்கும் நிலையில் சாதியின் தீமைகளை மீண்டும், மீண்டும் பேசவேண்டியிருக்கிறது.சமூகத்தின் புற்று நோயாய் புரையோடிப்போயிருக்கும் இந்தப்பொய்மைக்கட்டினை உடைப்பதற்கு, ஆக்கபூர்வமான மாற்றுத்திட்டத்திற்கு நமக்கு கிடைத்திருக்கும் ஓர் ஆவணம் .இந்தப் புத்தகத்தினை  .கட்டாயம் படிக்க வேண்டும். பரப்ப வேண்டும்

2 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

அவசியம் வாங்கிப் படிப்பேன் ஐயா
நன்றி

முனைவர். வா.நேரு said...

அய்யா, நன்றி, வருகைக்கும் கருத்திற்கும்