Tuesday 21 February 2017

'புறாக்காரர் வீடு ' -சிறுகதைத் தொகுப்பு-பாலகுமார் விஜயராமன்

கடந்த 04.02.2017 சனிக்கிழமை காலை 7.05 மணிக்கு ,  மதுரை வானொலியில் நூல் விமர்சனம் பகுதியில் ஒலிபரப்பபட்டதன் எழுத்துவடிவம் இது.......
                  **********************************************************

இன்று நாம் சுவைக்க இருக்கின்ற புத்தகத்தின் தலைப்பு 'புறாக்காரர் வீடு ' .புறாக்காரர் வீடு என்னும் இந்தப்புத்தகம் ஒரு சிறுகதைத் தொகுப்பு .இதன் ஆசிரியர் பாலகுமார் விஜயராமன். நூல் வனம்  பதிப்பகத்தால் ஜீன் 2016-ல் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 128 பக்கங்கள் உள்ள இந்தப் புத்தகத்தின் விலை ரூ 80 ஆகும்.

கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் பல நகரங்களில்  புத்தகத்திருவிழாக்கள் நடைபெறுகின்றன நம்மையெல்லாம் மிகப்பெரிய மகிழ்ச்சிக்கு உள்ளாக்கக்கூடிய செயல் இந்தப் புத்தகத்திருவிழாக்கள் .. ஆண்களும் பெண்களும் முதியவர்களும் இளைஞர்களும் குழந்தைகளுமாய் அணி அணியாய் புத்தகத்திருவிழாக்களில் அணி வகுக்கிறார்கள். புத்தகத்தின் உள்ளடக்கத்தை அறியாதவர்களை, ஒரு புத்தகத்தை எடுக்கவைப்பதில் அட்டைப்படத்திற்கு முக்கிய பங்கு உணடு. அப்படி பார்த்தவர்கள், கையில் உடனே எடுத்துபார்க்கும் வண்ணம் அழகிய அட்டைப்பட  வடிவமைப்பை இந்த புறாக்காரர் வீடு என்னும் சிறுகதைத் தொகுப்பு பெற்றிருக்கிறது.  எழுத்துப்பிழைகள் இல்லாத புத்தகமாகவும் இந்தப்புத்தகம் இருக்கிறது.

இந்த 'புறாக்காரர் வீடு ' என்னும் புத்தகத்தில் 14 சிறுகதைகள் இருக்கின்றன. 14 சிறுகதையுமே தனித்துவமாய் இருக்கின்றன. எந்தச்சிறுகதையும் இன்னொரு சிறுகதையைப்போல இல்லை.பல எழுத்தாளர்களில் தொகுப்புகள் தனித்தனிக் கதைகள் என்றாலும் ஒவ்வொன்றும் தனித்தன்மையான கதைகளாக இருப்பதில்லை. ஆனால் இந்தத் தொகுப்பு அப்படிப்பட்ட தனித்தன்மையைக் கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு கதையும் ஒரு மாறுபட்ட முயற்சியாக இருக்கிறது.ஒரு மாறுபட்ட வாசிப்பு அனுபவத்தைத் தருகிறது.

இந்தப் புத்தகத்திற்கு அணிந்துரையை எழுத்தாளர்  பாவண்ணன் எழுதியிருக்கின்றார். அவர் தனது அணிந்துரையில் "நல்ல சிறுகதை என்பது சொல்லப்பட்ட கதையை விட படித்துமுடித்தபின் சொல்லப்படாத கதையைப் பற்றியும் நம்மைச்சிந்திக்க வைப்பதாக இருக்கவேண்டும்." எனச்சொல்கின்றார். சொல்லப்பட்ட கதை என்பது சுருக்கமாக இருந்தாலும் கூட சொல்லப்படாமல் விட்ட கதை விரிவாக மனக்கண் முன் படிப்பவனுக்கு ஏற்படுத்திவிட்டால் அது சிறந்த கதைதான். பதினான்கு கதைகளுள் ஒன்றாக இருக்கக்கூடிய 'புறாக்காரர் வீடு'  என்னும் சிறுகதை அப்படிப்பட்ட ஒரு அனுபவத்தை வாசிப்பவருக்கு தருகிறது.





" புறாக்காரர் வீடு இத்தொகுப்பின் முக்கியமான ஒரு சிறுகதை. பிள்ளைகளைப் போல புறாக்களை பாசத்துடன் வளர்க்கும் அப்பா. புறாக்காரர் வீடு என்று அவர் வாழும் வீட்டை ஊரார்கள் அடையாளப்படுத்தும் அளவுக்கு அவருடைய பாசம் பேர்போனது.வீட்டின் மாடிப்பகுதியில் ஒருபக்கம் புறாக்கள் அடையும் கூடுகள்.இன்னொரு பக்கம் அப்பாவின் அறை. புறாக்கள் மெல்ல மெல்ல வளர்கின்றன. வானவெளியில் பறந்து திரிகின்றன. பொழுதெல்லாம் அலைந்து திரிந்துவிட்டு மாலையில் கூட்டை அடைகின்றன. புறாக்கள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கின்றன. குஞ்சுகளை அக்கறையோடு பார்த்துக்கொள்கின்றன. இரையெடுக்கவும் பறக்கவும் கற்றுக்கொடுக்கின்றன. சுதந்திரமாகப் பறந்து திரிவதைப் பார்த்து ஒதுங்கி நின்று மகிழ்கின்றன. அப்பா வளர்க்கும் புறாக்கள் வளர்ந்து பெரிதாவதுபோல பிள்ளைகளும் வளர்ந்து பெரியவர்களாகிறார்கள். பெரிய அக்கா வளர்ந்து மணம் முடித்துக்கொண்டு ஒரு திசையில் சென்று விடுகிறாள். சின்ன அக்காவும் தனக்கு விருப்பமான மாப்பிள்ளையையே திருமணம் செய்துவைக்கவேண்டும் என பிடிவாதம் பிடித்து ,மணம் முடித்துக்கொண்டு இன்னொரு திசையில் சென்று விடுகிறாள். தம்பி சென்று அடையவும் கல்விக்கான தேடல் என ஒரு திசை கிடைத்து விடுகிறது. அண்ணனுக்குத் திருமணம் நடக்கிறது. ஆனால் திசை தேடிச்செல்ல விரும்பாத அவன் வீட்டிலேயே இருந்து , கொஞ்சம் கூடக் குற்ற உணர்ச்சிக்கு ஆளாகாமல் மெல்ல மெல்ல அப்பாவின் இடத்தைக் கைப்பற்றி விடுகிறான். தனிமை வேண்டும் என்பதால் அப்பாவின் அறையை முதலில் எடுத்துக்கொள்கிறான் புறாக்கள் வளரும் கூண்டு நாற்றமடிக்கிறது என மகன் சொல்ல, கொஞ்சம் கொஞ்சமாக  புறாக்களின் எண்ணிக்கை குறைக்கப்படுகின்றது. மாடியில் அப்பா இல்லாததால் கவனிப்பாரில்லாத புறாக்கள் ஒன்றையடுத்து ஒன்றாக இறந்து போகின்றன. புறாக்கள் அந்த வீட்டில் இருந்தன, அவற்றை அவர் வளர்த்தார் என்பதெல்லாம் இப்போது ஒரு பழங்காலத்து அடையாளம் மட்டுமே. அப்பாவின் ஏக்கத்தையும் பெருமூச்சையும் மதிக்காத ஒரு புதிய காலம் எழுச்சி பெறுகிறது". அணிந்துரையில் பாவண்ணன் என்ன சொல்கின்றார் என்றால் இந்தக் கதை மிக நுணுக்கமான  குறீயீடுகளின் மூலமாக தனிமைப்பட்டுப் போகும் அப்பாவைப் பேசுகிறது எனச்சொல்கின்றார்.

இன்றைக்கு இருக்கும் முதியவர்களின் மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால் தனிமை. தனிமைதான் இன்றைய முதியவர்களுக்கு மிகப்பெரிய சவால். இயக்க தொடர்பு உள்ளவர்கள், நண்பர்கள் வட்டம் உள்ளவர்கள், வாசிக்கும் பழக்கமுள்ளவர்களாக இருக்கும் முதியவர்கள் தப்பித்துக்கொள்கிறார்கள்.ஆனால் அதிகாரமாக இருந்துவிட்டு, முதுமையில் தனிமைப்பட்டுப்போகும் முதியவர்களின் தனிமை கொடுமை. முதியவர்களை நன்றாக கவனித்துக்கொள்ளும் நாடுகள் என ஒரு பட்டியல் உலக அளவில் போட்டிருக்கின்றார்கள். அதில் கடைசியில் இருந்து 3 வது அல்லது 4-வது இடத்தில்தான் இந்தியா இருக்கிறது. மிக நுணுக்கமாக முதியவர்களின் தனிமையை இந்தக் கதை கூறுகிறது. வெறும் சட்டத்தினால் மட்டும் முதியவர்களின் தனிமையை சரிபடுத்திவிடமுடியாது. இன்றைக்கு சட்டம் இருக்கிறது. கவனிக்காத மகனை, மகளைப் பற்றிக் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கலாம் என்று. ஆனால் எத்தனை பெற்றோர்கள் நம் நாட்டில் அப்படிப் புகார் கொடுப்பார்கள்? ஆயிரத்தில் ஒருவர்கூட இருக்கமாட்டார்கள். தனியாய்க் கிடந்து மருந்தைக் குடித்து செத்தாலும் சாவார்களே தவிர புகார் அளிக்கமாட்டார்கள்.. எவ்வளவுதான் ஒதுக்கப்பட்டாலும் முதியவர்கள் வீட்டிலிருந்து ஒதுங்க விரும்புவதில்லை. புறாக்கள் தனது குஞ்சுகளை பிரித்து தனித்து போ எனச்சொல்கின்றன, அல்லது தாங்கள் தனித்து போய்விடுகின்றன. ஆனால் அப்பாக்கள் அப்படி இல்லை. இப்படி மிக நுட்பமாக மூத்தவர்களின் பிரச்சனையை சொல்லியிருக்கும் கதையாக இந்தத் தொகுப்பில் உள்ள ;புறாக்காரர் வீடு ' என்னும் கதை இருக்கிறது. இந்தக் கதையைச்சொல்லியிருக்கும் பாங்கு, மொழி நன்றாக உள்ளது.

அதனைப் போலவே 'முதல் தாயம் ' என்னும் சிறுகதை பொறியியல் படித்து முடித்து வேலையைத் தேடும் ஒரு இளைஞனைப் பேசுகிறது. 'முழுதாய் பத்து மணி நேரம் கரைந்திருந்தது அவன் அந்த அலுவலக வளாகத்திற்குள் நுழைந்து' என்று ஆரம்பிக்கும் கதை ஒரு பன்னாட்டு தொழில் நிறுவனத்தில் தொழில் நுட்ப தேர்வுக்காக நிற்கும் அவனின் மன ஓட்டத்தைப்பேசுகிறது. கல்லூரியில் படிக்கும்போதே , வளாகத்தேர்வுகளில் தான் ஏன் தேர்வாகவில்லை என்னும் கேள்வி இன்றுவரை அவனுக்கு தொக்கி நிற்கிறது. பள்ளிப் படிப்பு முடித்து பொறியியல் படிக்கும் அவனை  அவனது குடும்பமே நம்பி நிற்கும் வேலையில் வளாகத்தேர்வுகளில் அனைத்துக்கட்டங்களிலும் தேர்வு பெற்று , ஆனால் நேர்முகத்தேர்வின் முடிவில் தேர்ந்தெடுக்கப்படாமல் போனது ஏன் என்பது புரியாமல் போனாலும் வேலை கிடைக்கும் என்னும் நம்பிக்கையோடுதான் கல்லூரி நாட்கள் நகர்கின்றன. ஆனால் கல்லூரியை முடித்து வெளியே வந்ததும் வேலைக்காக ஒவ்வொரு அலுவலகமாக ஏறி ஏறி இறங்கி சோர்ந்து போகிறான். வளாகத் தேர்வுகளில் மயிரிழையில் தவற விட்ட வாய்ப்புகள் கொடுங்கனவாய்த் துரத்துகின்றன, தன்னுடன் படித்த ஆனால் வளாகத்தேர்வில் வெற்றி பெற்ற நண்பர்கள் மேல் பொறாமை படத்தோன்றுகிறது.தொடர்ந்து தோன்றும் உணர்வுகளை ' இயலாமை வெறுப்பாய் மாறியபோது ,மெளனம் மிகப்பெரிய தடுப்புச்சுவராய்  மாறி உள்ளெரியும் தீயை மறைத்துக்கொள்ள உதவியது. கொடும்பசியில் தூங்குகின்றவனை தட்டி எழுப்பி , ' இன்று உனக்கு உணவு இல்லை, படுத்துறங்கு !" என்று கூறிச்செல்லும் அசரிரியாய்த்தான் ஒவ்வொரு நேர்முகத்தேர்வும் இருந்தது. பகல் வேளையில் தனியனாய் அறையில் அமர்ந்திருக்கும் போது பெருங்குரலெடுத்துக் கத்தி, சுற்றி சுற்றி கண்ணாமூச்சி காட்டிக்கொண்டிருக்கும் கடவுளை பளாரென கன்னத்தில் அறையத் தோன்றும் " என வேலை இல்லாமல் இருக்கும் நிலையை கதாசிரியர் விவரித்துச்செல்கின்றார். முடிவில் பத்து மணி நேரம் காத்திருந்த பன்னாட்டு நிறுவனத்தில் தொழில் நுட்பத்தேர்வில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும் பேரில் இவனது பெயரும் இருக்கிறது. பணி நியமன ஆணை கையில் கிடைக்கிறது. 'பணியானைப் பெற்றுக்கொள்ள எழுகையில் ,தரையில் அவனது கால் அழுத்தமாகப் பதிந்தது. ஆட்டத்திற்கான முதல் தாயம் விழுந்து விட்டது. பயணம் துவங்கியது " என  முதல் தாயம் கதை முடிகிறது.

தாயம் விளையாட்டைப் போலத்தான் வாழ்க்கை விளையாட்டும் இருக்கிறது. முதல் தாயம் போட்டுவிட்டவர்கள் , காய்களை நகர்த்திக்கொண்டு உள்ளே போய்க்கொண்டிருக்க, இன்னும் முதல் தாயம் போடாதவர்கள் தாயம் விழு , தாயம் விழு என மனதிற்குள் சொல்லிக்கொண்டே தாயம் விளையாடுவதைப்போல, உடன் படித்தவர்கள் வளாகத்தேர்வில் வெற்றிபெற்று அடுத்த ,அடுத்த கட்டங்களுக்கு நகர்ந்து சென்று கொண்டிருக்க வேலை கிடைக்குமா , வேலை கிடைக்குமா என்று வேலை தேடி அலைவதை முதல் தாயம் விழு, விழு எனச்சொல்லிக்கொண்டே விளையாடுவதைப்போன்றது என்று ஒப்பிடுகின்றார். நல்ல ஒப்பீடு. மனதில் நிற்கும் சிறுகதை.  .

               அதேபோல 'மழை வரும் பருவம் ' என்னும் கதை. ஒரு கொடுமையான அனுபவம். கல்லூரியில் படிக்கும் நண்பன். அந்த நண்பனின் அம்மா இறந்துபோனதாக செய்தி வருகிறது. அம்மாவின் இறப்பிற்குச்செல்லும் நண்பனோடு உடன் செல்லும் நண்பனின் அனுபவமாக இந்தக் கதை அமைகின்றது. வண்டியில் செல்லும் போது எதுவுமே பேசாமல் இறுக்கமாக வரும் நண்பன், எதைக் கேட்டாலும் விட்டேத்தியாக பதில் சொல்லும் நண்பன், நண்பனின் அம்மா எப்படி நண்பனை வளர்த்தார்கள் என்பதெல்லாம் மிக விளக்கமாக இந்தக் கதையில் எழுதப்பட்டுள்ளது. அதிலும் நண்பனின் அப்பா, நண்பன் அம்மாவின் வயிற்றில் கருவாக இருக்கும்போதே இறந்து விட, கண்வனின் இறப்பிற்காக கூடும் கூட்டத்தில் 'நான் சொல்ல ஒரு செய்தி இருக்கிறது ' என்று சொல்லி நெல்லுமணியின் மூலம் தான் கர்ப்பமாக இருப்பதைச்சொல்வதாக கதை நகர்கிறது. எழுத்தாளர் தொ.பரமசிவம் , தனது 'அறியப்படாத தமிழகம்' என்னும் நூலில் , கர்ப்பமாக இருக்கும் நிகழ்வை, கணவன் இறந்துவிட்ட நிலையில் நெல் மணிகள் மூலமாக  ஊர்மக்களுக்கு மனைவி தெரிவிக்கும் நிகழ்வைக் குறிப்பிடுவார். அப்படிப்பட்ட ஒரு நிகழ்வு இக்கதையில் வருகின்றது. துக்கத்தை அடைத்துவைத்துக்கொண்டே வந்த நண்பன் தனது அம்மாவின் பிணத்தைப் பார்த்ததும் உடைந்து போய் அழுவதை பாலகுமார் தனக்கே உரித்தான நடையில் விவரித்துச்செல்கிறார். மிக  ஆழமான கதை. துன்பங்களை அடைத்து வைத்துக்கொண்டிருக்கும் பலர் அதனை வெளிக்காட்டிக்கொள்வதில்லை, மழை வருவதற்கு முன்னால் மேகங்கள் கூடுவதுபோல கூடிக்கொண்டே வரும் துன்பம் ஒரு கட்டத்தில் கண்ணீராய், அழுகையாய் மழையென கொட்டுகிறது என்பதனை விவரித்துச்செல்கின்றார்.

               பாலகுமார் விஜயகுமார் என்னும் எழுத்தாளரின் முதல் சிறுகதைத் தொகுப்பான 'புறாக்காரர் வீடு ' நல்ல வாசிப்பு அனுபவத்தைத் தருகின்ற புத்தகம் . நீங்களும் வாங்கி வாசித்துப்பாருங்கள்.
 புத்தகத்தின் தலைப்பு 'புறாக்காரர் வீடு ' .புறாக்காரர் வீடு என்னும் இந்தப்புத்தகம் ஒரு சிறுகதைத் தொகுப்பு .இதன் ஆசிரியர் பாலகுமார் விஜயராமன். நூல் வனம்  பதிப்பகத்தால் ஜீன் 2016-ல் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 128 பக்கங்கள் உள்ள இந்தப் புத்தகத்தின் விலை ரூ 80 ஆகும்

                         ***************************************************

. நூல் விமர்சனத்திற்காக என்னால் தயாரிக்கப்பட்டு, என் குரலில் ஒலிபரப்பானது. மதுரை அகில இந்திய வானொலிக்கு எனது நன்றிகள். வா.நேரு

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

தாயம் = வாழ்க்கை

வாழ்த்துகள் ஐயா...

முனைவர். வா.நேரு said...

வாசிப்பிற்கும், கருத்திற்கும் நன்றி திண்டுக்கல் தனபாலன் அவர்களே

கரந்தை ஜெயக்குமார் said...

வாழ்த்துக்கள் ஐயா

முனைவர். வா.நேரு said...

ஐயா,நன்றி.