Sunday 12 February 2017

அவன் தோரணையும் இறுமாப்பும்.....



அலுவலக
உணவுக்கூடம்
எப்போதும்
களை கட்டும்

அணி அணியாய்ப்
பிரிந்து நின்று
அரசியல் பேசும்...

நெற்றி நிறைப்
பட்டை
வயது முதிர்
பெருசுகளின்
அசிங்கப்பேச்சுகளால்
சில நேரம்
வாயில் இடும்
உணவு கூட
வாந்தியாய்
வெளியில் வரும்.....

நற்செய்திக்
கூட்டங்களின்
நாயகரின்
அழுக்குப்பேச்சுகள்
மனதுக்குள் எப்போதும்
காமத்தை
சுமந்தலையும்
'பிராய்டின்'
தத்துவத்தை
நினைவுபடுத்தும்..


உணவுக்கூடம்
உடன் உண்ணுபவனுக்கு
சில நேரம்
மருத்துவம் சொல்லும்...
பலரின் மகத்துவம்
சொல்லும் .....
இன்னும் இன்னும்
எழுத்தில் எழுத
முடியாத எது எதுவோ
பகிரப்படும்..........

எப்போதும்
ஒரே கட்சியாய் நின்று
எதிர்க்கட்சிகளின்
கேள்விகளுக்கு
இடக்கு மடக்காய்
பதில் சொல்லும்
இருவரும் அன்று
தங்களுக்குள்
சண்டை இட்டுக்
கொண்டிருந்தனர்.....

யார் பெரியவர்கள்?
ஊழலில்...
வாரிசு அரசியலில்...
திடீரெனத் தாங்கள்
வரித்துக்கொண்ட
தலைமைக்கு ஆதரவாய்
நெருப்பென வார்த்தைகளை
கொட்டித் தீர்த்துக்கொண்டனர்....

பூனைகளுக்கு
அப்பம் பகிர்ந்தளித்த
குரங்கு போல
பல இலட்சம்
சட்டையணியும்
தலைவரின் தொண்டன்
அமைதியாய்ப் பார்த்து
ரசித்து
சிரித்துக்கொண்டிருந்தான்

சின்ன ரவுடிகளை
மோதவிட்டு
வேடிக்கை பார்க்கும்
பெரிய ரவுடியென
அவன் தோரணையும்
இறுமாப்பும்.....

உணவுக்கூடமே
திடீரென
கற்றுத்தரும்
பள்ளிக்கூடமாய்.....

                                          வா.நேரு, 13.02.2017


4 comments:

Geetha said...

உண்மை தான் அய்யா.

முனைவர். வா.நேரு said...

நன்றி , தங்கள் கருத்திற்கு.....

கரந்தை ஜெயக்குமார் said...

உண்மை ஐயா

முனைவர். வா.நேரு said...

ஐயா நன்றி , தங்கள் கருத்திற்கு.....