Saturday 2 December 2017

உற்றநோய் நோன்றலும் ஊர்நலம் ஓம்பலும்......

                                                                  தமிழர் தலைவர் வாழியவே......
திராவிடர் கழகத் தலைவர், ‘விடுதலை’ ஆசிரியர், தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் 85 ஆம் ஆண்டு பிறந்த நாள் டிசம்பர் 2.
இந்த 85 ஆண்டில், இவர்தம் பொதுவாழ்வின் அகவை 75. இந்த விகிதாசாரம் இவரேயன்றி, தமிழ்நாட்டில் வேறு யாருக்கும் வாய்த்திராத ஒன்றே - தனித்தன்மையே!
பத்து வயதில் தந்தை பெரியாரைப் பார்த்த அந்தத் தருணம் முதல் அவர் வைத்த கண் - வரித்த கொள்கையில் எவ்விதப் பிசிறுக்கும் இடமேயில்லை - மேலும் மேலும் உறுதிப்பாடும், உத்வேகமும், உற்சாகமும் மேலிட்டே வந்திருக்கிறது.
வெறும் பேச்சாளராக, எழுத்தாளராக, நிர்வாகியாக மட்டும் அமைந்திடாமல், சிறுவயதில் அவர் மேற்கொண்ட களப்பணி இயக்கம் மற்றும் பொது வாழ்வில் உரமேற கால்கோலாக அமைந்தது என்றே கூறவேண்டும்.
அவருக்கு அமைந்த சூழல் மிகமிக அருமையானது. பள்ளிப் பருவத்தில் ஊன்றப்படும் விதை என்பது விருட்சமாக ஓங்கி வளரக்கூடியது என்பதற்கு அவரே உதாரணம்.
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அதனை மிக அழகாக நேர்த்தியாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளார்.
‘‘இளமை வளமையை விரும்பும் என்பர்
இளமை எளிமையை விரும்பிய புதுமையை
வீரமணியிடம் நேரில் கண்டுள்ளேன்!
பாடிக் கைவீசிப் பலருடன் உலவி
வேடிக்கை பேசும் வாடிக்கைதன்னை அவன் பாற்
காண்கிலேன் அன்றும் இன்றும்
உற்றநோய் நோன்றலும் ஊர்நலம் ஓம்பலும்
நற்றவம் என்பர்; தொண்டென நவில்வர்!
தொண்டு மனப்பான்மை அந்தத் தூயனைக்
கொண்டது குழந்தைப் பருவத்திலேயே!’’
- எத்தகைய சரியான படப்பிடிப்பு இது!


திராவிட மாணவர் கழகத்தில் ஏராளமானவர்கள் இருந்த னர் - பல்கலைக் கழகங்களில் பயிலவும் செய்தனர். அந்தப் பட்டியலில் இவருக்கு உள்ள தனிச் சிறப்பு கல்வியில் பட்டொளிவீசிப் பறந்ததாகும். இதில் இவருக்கு நிகர் இவரே!
பல்கலைக் கழகத்தில் முதல் மாணவராக தங்கப் பதக்கத் துக்குரிய தங்கமாக ஒளிவீசினார் - மாணவராக இருந்தபோதே பேச்சுப் போட்டிகளில் பங்கேற்று பரிசுகளைத் தட்டிச் சென்ற வர். விடுமுறை நாள்களில் கடலூர் வீரமணியாகப் பட்டிதொட் டியெல்லாம் சுழன்று பிரச்சாரப் பேரிகை கொட்டியவர்.
தந்தை பெரியாரிடத்தில் முழு நம்பிக்கை பெற்றதிலும் முதல்வராக இருந்தவரும் இவரே! இதனைத் தந்தை பெரியார் அவர்கள் எழுத்துப் பூர்வமாகப் பதிவு செய்ததன்மூலம் நன்கு அறிய முடியும்.
தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் ஆகியோர் மறைவிற்குப் பிறகு இந்த இயக்கத்தை நடத்திய பாங்கு, இயக்க அமைப்பு முறைகளில் கொண்டு வந்த மாற்றங்கள், பிரச்சார யுக்திகள், ஏடுகளை, இதழ்களை எழிலார்ந்த முறையில் நவீனத்துவத்துடன் மேம்படுத்திய நேர்த்தி, இயக்க நூல்களை எண்ணற்ற முறையில் வெளியிட்டு கடைகோடி மனிதனுக்கும் கழகக் கருத்துகள் போய்ச் சேருவதற்கான வழிமுறைகள் - வெளிநாடுகளிலும் இணைய தளத்தின்மூலம் முதன்முதலாகக் கொண்டு சென்ற சாதனை, பன்னாடுகளிலும் தந்தை பெரியாரைக் கொண்டு சென்ற வெற்றி என்பதெல்லாம் எமது ஆசிரியர் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களையே சாரும்.
இடை இடையே அரசுகளின் இடையூறுகள், இயக்கத்தில் சிறுசிறு பிளவுகள், தூற்றல் படலங்கள், தமிழக அரசியலில் தலைதூக்கும் விபீடணர்களின் திசை திருப்பும் பிரச்சாரங்கள், பார்ப்பனர்களின் ஊடக விஷமங்கள், இருட்டடிப்புகள் இன்னோரன்ன இடையூறுகள், தடைகளையெல்லாம் தாண்டி இயக்கத்தை மட்டுமல்ல - இனத்தின் உரிமை மீட்பில் தளகர்த் தராக இருந்து வெற்றி அறுவடைகளைக் குவித்தது சாதாரண மானதல்ல.
சமூகநீதி என்னும் தாயின் செல்வமான திராவிட இயக்கத் தைச் சேர்ந்தவர்கள் ஆட்சியிலே இருந்தபோதே இட ஒதுக்கீட் டில் பொருளாதார அளவுகோலைக் கொண்டு வந்து குழப்பத் தைத் திணிக்கவில்லையா? வேறு யார்? எம்.ஜி.ஆர்.தான்.
அதனைப் புறம்கண்டு, தேர்தலில் தோல்வி என்றால் என்னவென்றே அறிந்திராத எம்.ஜி.ஆருக்கே தண்ணீர் காட்டினாரே தமிழர் தலைவர்.
69 சதவிகித இட ஒதுக்கீடுக்கு வில்லங்கம் வந்தபோது, பார்ப்பன முதலமைச்சரையே பயன்படுத்தி, அதனைக் கட்டிக்காக்க தனி சட்டத்தையே எழுதிக் கொடுத்து நிறைவேற்ற செய்தது சாதாரணமா?
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் தந்தை பெரியாரால் வந்தது என்றால், 76 ஆம் சட்டத் திருத்தம் வந்தது தந்தை பெரியாரின் மாணாக்கர் ஆசிரியர் வீரமணி அவர்களால் அன்றோ!
மத்திய அரசில் இல்லாதிருந்த பிற்படுத்தப்பட்டவர்களுக் கான இட ஒதுக்கீட்டை மண்டல் குழுப் பரிந்துரையை அமல்படுத்த வைத்ததன்மூலம் சாதித்துக் காட்டினாரே!
அதன் பலன் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, அகில இந்திய அளவில் கோடானு கோடி பிற்படுத்தப்பட்ட மக்களின் வயிற் றில் பாலை வார்த்தாரே!
தந்தை பெரியார் இறுதியாக அறிவித்த தீண்டாமை - ஜாதி ஒழிப்புப் போராட்டமான அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை எனும் களத்தில் அனேகமாக வெற்றியின் முனையை நெருங்கிக் கொண்டிருக்கிறார்.
இந்தியாவை அரற்றும் இந்துத்துவா மதவாத அரசியலுக்கு - அதிகாரத்துக்கு முடிவு கட்டுவதிலும், அனைத்து கட்சியினரும் ஏற்றுக்கொள்ளும் தளபதியாக, தலைவராக இன்றைய தினம் விளங்கிக் கொண்டிருப்பவர் மானமிகு வீரமணி அவர்களே!
85 வயதை எட்டும் ஆசிரியர் எண்ணற்ற ஆண்டுகள் மேலும் வாழ்ந்து தந்தை பெரியார் எண்ணங்கள் அனைத்தும் வெற்றி முகட்டில் பறந்திடப் பாடுபடுவாராக! அப்பணிக்கு அர்ப்பணிப்போடு துணை நிற்போமாக!
வாழ்க பெரியார்! வெல்க அவர்தம் சித்தாந்தம்!
நன்றி : விடுதலை தலையங்கள் 02.12.2017

2 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

போற்றுதலுக்கு உரியவர்

முனைவர். வா.நேரு said...

அய்யா, உண்மை.போற்றுதலுக்கும் மட்டுமல்ல, பின்பற்றப்படவும் வேண்டியவர். அய்யா ஆசிரியர் தலைமையில் எனது திருமணம் 1993-ல் மதுரையில் நடந்தது.1988-ல் குற்றாலத்தில் நடைபெற்ற திராவிடர் கழக பயிற்சி முகாமில் நான் கலந்து கொண்டு, அவரின் உரைகளை மிக அருகில் இருந்து கேட்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அப்பொழுது முதல் இப்போதுவரை அவரின் அணுகுமுறையும், தொண்டர்களோடு கொண்டுள்ள தோழமையும் மிகப்பெரிய வியப்பை எனக்கு கொடுக்கக்கூடியவை.வெளி மாநிலங்களுக்கு அகில இந்திய நாத்திக மாநாடு, உலக நாத்திக மாநாடுகள் போன்றவற்றில் அவரின் ஆங்கில உரைகளையும் கேட்டிருக்கிறேன். தமிழில் உரையாற்றும் அதே வேகத்தோடும் தந்தை பெரியாரின் கருத்துக்களோடும் அவரின் உரைகள் மிகுந்த உணர்ச்சியும் உத்வேகமும் அளிப்பவை.கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக அவரின் தலைமையின் கீழ் பகுத்தறிவாளர் கழகத்தின் பொறுப்புகளில் இருந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். புத்தகத்தின் மீது அவர் கொண்டிருக்கும் விருப்பமும்,புத்தகத்தை வாசித்து அவர் உள்வாங்கி அதனை வெளிப்படுத்தும் லாவகமும் எண்ணி எண்ணி வியக்கத்தக்கது.நிறைய எழுதலாம், எழுத வேண்டும் ..... நன்றி,தங்கள் வருகைக்கும், கருத்திற்கும்.