Monday 29 January 2018

எதிர்க்கவிதையாளர் நிகனோர் பர்ரா!........சமயவேல்

எதிர்க்கவிதையின் முன்னோடியான நிகனோர் பர்ரா, சிலியின் சான்டியாகோ நகரில் ஜனவரி 23-ல் தனது 103-வது வயதில் காலமானார். “சிலி தனது இலக்கிய வரலாற்றில் ஒரு மாபெரும் ஆசிரியரை இழந்துவிட்டது. மேற்கத்தியக் கலாச்சாரத்தில் தனித்ததொரு ஒற்றைக் குரல் அவருடையது” என்று அந்நாட்டு அதிபர் மிச்செல் பாச்சிலே புகழஞ்சலி செலுத்தியிருக்கிறார். தேசியக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்க விடவும், நாடு முழுவதும் இரண்டு நாள் துக்கம் அனுஷ்டிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

நிகனோர் பர்ரா, லத்தீன் அமெரிக்காவில் மிகுந்த செல்வாக்குள்ள கவிஞர். நீண்டகாலமாகக் கவிஞர் பாப்லோ நெருதா தக்கவைத்திருந்த ஸ்தானத்தின் சரியான வாரிசாக அமைந்தார். எதிர்க்கவிதையின் பிரதிநிதியாக, சிலியில் மட்டுமல்ல உலகம் முழுவதிலும் இலக்கிய வெளிப்பாட்டை புரட்சிகரமாக மாற்றியவர். ஒரே சமயத்தில் நகைச்சுவையாகவும் உணர்ச்சித் ததும்பலாகவும் எல்லாவற்றுக்குமான பதிலியாகவும் எளிதில் அணுக முடிவதாகவும் இருந்த இவரது எதிர்க்கவிதை, ஸ்பெயின், லத்தீன் அமெரிக்கக் கவிஞர்களின் அலங்கார ‘ரொமாண்டிக்’ மரபுக்கு எதிரானதாக இருந்தது.

சிலி நாட்டின் சில்லான் என்னும் சிறுநகரில் 1914-ல், இசையால் ஆசிர்வதிக்கப்பட்ட குடும்பத்தில் பிறந்தார். அவரது சகோதரி வயலெட்டா பர்ரா, உலக அளவில் புகழ்பெற்ற பாடகியாகவும் பாடலாசிரியராகவும் இருந்தார். பள்ளி ஆசிரியரான அவரது அப்பா இரவில் கிட்டார் வாசிப்பதில் மகிழ்ச்சி அடைந்தார். ஆனால், பாடுவதும் ஆடுவதும் போக அவர் குடிக்கவும் செய்தார். அப்பாவின் இந்த நடவடிக்கைகளைக் கண்டித்து அவரது கிட்டாரின் நரம்புகளைக் கழற்றிவிட்டார் இளம்வயது நிகனோர் பர்ரா. தனது வாழ்க்கை முழுவதும் அவர் செய்யவிருந்த கலகங்களின் முன்னோட்டம் அது.

சான்டியாகோவில் உள்ள ஒரு சிறந்த உயர்நிலைப் பள்ளியின் கல்வி உதவித்தொகையை பர்ரா வென்றார். அவரது முதன்மையான ஆர்வம் இலக்கியமாக இருந்தபோதும் கணிதத்தின்பால் அவர் ஈர்க்கப்பட்டார். சிலி பல்கலைக்கழகத்தில் கணிதத்திலும் இயற்பியலிலும் பட்டங்கள் பெற்றார். பின்னர் ஆக்ஸ்ஃபோர்டு சென்று எந்திரவியலும் பிரபஞ்சவியலும் பயின்றார். ஒரு இயற்பியல் பேராசிரியராக சிலி திரும்பிய அவர் ஆர்க்கிமிடீஸ், அரிஸ்டாட்டிலிருந்து நியூட்டன் வரையிலும் பயின்றார். நியூட்டனை நிராகரித்த அறிவியல் ஞானம், ஒரு கவியாக பர்ரா வளர்வதைப் பாதித்தது. எந்த ஒரு விஷயத்தின் உண்மையும் அது எவ்வாறு பார்க்கப்படுகிறது என்பதைப் பொறுத்தது என அவர் நம்பத் தொடங்கினார். கலாச்சாரம், அரசியல் மற்றும் மதம் ஆகியவற்றின் உண்மையான பிரச்சினைகளைக் கவிதை கையாள வேண்டும் என நம்பினார்.

தனது சமகால அக்கறைகளைக் கையாள ஒரு புதிய மொழியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதை அவர் உணர்ந்தார். வால்ட் விட்மனின் பேச்சு மொழியையும், காஃப்காவின் அவல நகைச்சுவையையும் இணைக்கும் முயற்சியில் சொற்களை இரு நிலைகளில் பயன்படுத்தினார். ஒன்று மற்றதை விமர்சிக்கையில் ஒரு நகைமுரண் விளைவு உருவாகியது. இந்த வகையில் கவிதைகளை, கணிதத் தேற்றங்களாக எழுத ஆரம்பித்தார் பர்ரா. குறைந்த சொற்கள், நிறைந்த உள்ளடக்கம். மொழிச் சிக்கனம். படிமங்கள் இல்லை. உருவகங்கள் இல்லை. நேரடிக் கவிதைகள் இவ்வாறே உருவாகின. பிழைப்புக்கு இயற்பியல், உயிர்த்திருப்பதற்குக் கவிதை என்றார்.

லத்தீன் அமெரிக்காவில் முதல் நோபல் பரிசைப் பெற்ற, கவிஞர் கேப்ரீயலா மிஸ்ட்ரால் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட பிறகு, மேடையில் தாவிக் குதித்த ஏறிய பர்ரா ஒரு கவிதை வாசித்தார். அதைக் கேட்ட மிஸ்ட்ரால், “உலகளாவிய புகழை அடையப்போகிற ஒரு கவி நம்முன் நிற்கிறார்” என்றார். அது உண்மையும் ஆகியது. பிறகு, பாப்லோ நெருடாவைச் சந்தித்தார். பர்ராவின் ‘கவிதைகளும் எதிர்க்கவிதைகளும்’ தொகுப்பை வெளியிட ஒரு பதிப்பகத்தை ஏற்பாடு செய்துகொடுத்தார் நெருதா. இத்தொகுப்பு 1954-ல் வெளியாகிப் பரவலாக வாசிக்கப்பட்டது. இரு விருதுகளையும் வென்றது. கவிதை என்னும் வடிவத்தைச் சுற்றிக் கட்டப்பட்டிருந்த தீவிரமான புனிதக் கோட்டை, பர்ராவால் தகர்த்தெறியப்பட்டது. அடுத்ததாக வெளியான ‘சலான் செய்யுள்கள்’ என்னும் தொகுப்பு, லத்தீன் அமெரிக்க இலக்கியத்தில் அசலான, புதிதான குரலை உறுதிசெய்தது. பிறகு 20-க்கும் மேற்பட்ட கவிதைத் தொகுப்புகள் வெளியாகின.

சமூக அரசியல் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகத் தொடர்ந்து பேசிவந்தார். தனது சுதந்திரத்தை அவர் பெரிதும் பேணிய போதிலும் அவரது கவிதைகளில் அரசியல் அதிகரித்துக்கொண்டே இருந்தது. “நான் வலதையோ இடதையோ ஆதரிக்கவில்லை. வார்ப்பில் கட்டிதட்டிப்போன எல்லாவற்றையும் உடைக்கிறேன்” என்றார். யதார்த்தத்தை சார்பியல்ரீதியாகப் பார்க்கும் அவரது பார்வை, எல்லா வகையான அரசியல் கோஷங்களையும், அவை எத்திசையில் இருந்து வந்தாலும், ஐயப்பட வைத்தது. சிலியின் அயந்தே நாட்களில் அவர் விலக்கப்பட்ட கவியாக இருந்தார். ஆனால் ‘கலைப் பொருட்கள்’ என்னும் ஒரு சிறிய கேலிச்சித்திரம் போன்ற கிறுக்கல் கவிதைத் தொகுப்பை வெளியிட்டு தனது சுதந்திரத்தைக் காப்பாற்றிக்கொண்டார். இதுவரை கவிதையே வாசிக்காதவர்கள்கூடப் புரிந்துகொள்ளும்படி விளம்பரங்களைப் போல அவை வடிவமைக்கப்பட்டிருந்தன. பின்னாட்களில் சூழலியல் கவிதைகளையும் எழுதி ‘எக்கோ போயம்ஸ்’ என்னும் தொகுப்பை வெளியிட்டார். ‘இன்னொரு முறை என்னால் இந்தப் பூமியைப் படைக்க முடியாது’ என்று கடவுள் கூறுவதாக எழுதினார்.

சிலியின் தேசிய விருதை 1969-லும் 1981-லும் பெற்றார். ஸ்பானிஷ் மொழியின் மிக உயரிய செர்வாண்டிஸ் விருதை 2011-ல் பெற்றார். தான் எழுதத் தொடங்கியதிலிருந்து ஒரு கலகக்காரக் கவியாகவே வாழ்ந்து மறைந்துள்ளார் நிகனோர் பர்ரா.

- சமயவேல், கவிஞர், ‘அரைக் கணத்தின் புத்தகம்’,

‘இனி நான் டைகர் இல்லை’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்

தொடர்புக்கு: samayavelk@gmail.com

நான் கூறிய எல்லாவற்றையும் திரும்ப எடுத்துக்கொள்கிறேன்

நான் செல்வதற்கு முன்பு

ஒரு கடைசி ஆசையைப் பெறுவதாக நான் நம்புகிறேன்:

தாராளமான வாசகர்களே

இந்தப் புத்தகத்தை எரித்துவிடுங்கள்

நான் என்ன கூற விரும்பினேனோ அதுவே இல்லை

இது ரத்தத்தில் எழுதப்பட்டபோதிலும்

நான் என்ன கூற விரும்பினேனோ அது இல்லை.

என்னுடையதைப் போலத் துயரமானது எதுவும்

இருந்திருக்க முடியாது

எனது சொந்த நிழலால் நான் தோற்கடிக்கப்பட்டேன்:

எனது சொற்கள் என் மேல் பழி தீர்த்தன

வாசகரே, நல் வாசகரே, என்னை மன்னித்துவிடுங்கள்

நான் உங்களை விட்டுப் போக முடியாவிட்டால்

ஒரு கதகதப்பான தழுவலோடு,

நான் உங்களை விட்டுப் போகிறேன்

ஒரு கட்டாயப்படுத்தப்பட்ட மற்றும் வருத்தமான புன்னகையோடு.

அவ்வளவுதான் நானாக இருக்கலாம்

ஆனால், எனது கடைசி வார்த்தையைக் கேளுங்கள்:

உலகத்தில் இருக்கும் மாபெரும் கசப்புடன்

நான் கூறிய எல்லாவற்றையும் திரும்ப எடுத்துக்கொள்கிறேன்.

ஸ்பானிஷ் மொழியிலிருந்து ஆங்கிலத்தில்: மில்லர் வில்லியம்ஸ்; தமிழில்: சமயவேல்
-------------------------------------------------------------------------------------------------------------------------

நாம் பாப்லோ நெருதாவை தமிழ் வழியாக அறிந்திருக்கின்றோம். அப்படி நிகனோர் பர்ரோவை தமிழ் வழியாக அறியும் வாய்ப்பை தி இந்து -தமிழ் வழியாக கவிஞர் சமயவேல் ஆரம்பித்து வைத்திருக்கின்றார் என நினைக்கின்றேன். (ஏற்கனவே இருந்திருந்தால் குறிப்பிட்டிருப்பார்). நல்ல கவிஞர்கள் எல்லோருமே உலகம் முழுவதும் அறியப்படவேண்டும். தேசியக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்க விட்டும், நாடு முழுவதும் இரண்டு நாள் துக்கம் கடைப்பிடித்தும் ஒரு கவிஞனுக்காக மரியாதையை செலுத்திய சிலி நாடு,சிறிய நாடு என்றாலும் பண்பால் பெரிய நாடாகத்தோன்றுகிறது.எதிர்க்கவிதையாளர் நிகனார் பர்ரோ பற்றிய நினைவஞ்சலி கட்டுரை மிகவும் உருப்படியான கட்டுரை.இதனைப் படித்து இணையத்திலும் தேட ஆரம்பித்து இருப்பார்கள் நமது இளைஞர்கள்.வெளி நாட்டு கவிஞர்களைப் பற்றிய கட்டுரைகளில் கவிஞர்களின் பெயரை ஓரிடத்திலாவது ஆங்கிலத்திலும்-அடைப்புக்குறிகளுக்குள் குறிப்பிடலாம். அவர்களின் கவிதைகளைப் படிப்பதற்கான இணைய சுட்டிகளையும் குறிப்பிடலாம். முனைவர்.வா.நேரு,மதுரை
------------------------------------------------------------------------------------------------------------
நன்றி : தி இந்து தமிழ் 28.01.2018

No comments: